

நாடுமுழுவதும் வரும் 17-ம் தேதி போலியோ சொட்டுமருந்து முகாம் நடக்க இருந்த நிலையில் எதிர்பாராத நடவடிக்கைகள் காரணமாக தேதி குறிப்பிடாமல் போலியோ முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவி்த்துள்ளது.
வரும் 16-ம் தேதி நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்படுவதையடுத்து, போலியா சொட்டுமருந்து முகாம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பச்சிளங்குழந்தை முதல் 5 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இளம்பிள்ளைவாதம் வாதம் வராமல் தடுக்க தேசிய போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 8-ம் தேதி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்த, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன், “ தேசிய போலியோ சொட்டுமருந்து முகாம் வரும் 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அடுத்த சில நாட்களில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் நடத்தும் நாள் அறிவிக்கப்பட்டது. இரு முகாம்களையும் அடுத்தடுத்து நடுத்தவதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால், போலியோ முகாம் தள்ளிவைக்கப்படலாம் எனப் பேச்சு எழுந்தது. இந்நிலையில் மத்திய அரசு அதிகாரபூர்வமாக அனைத்து மாநிலங்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநிலங்களின் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் மத்திய சுகாதார்துறை அமைச்சகம் கடந்த 9-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
எதி்ர்பாராத நடவடிக்கைகள் காரணமாக ஜனவரி 17-ம் தேதி நடக்க இருந்த தேசிய போலியா சொட்டுமருந்து முகாம் தேதி மறு அறிவிப்பு வரும் வரை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 16-ம் தேதி நாடுமுழுவதும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் முதல்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. அதன்பின் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 50 வயதுக்குட்பட்ட இணை நோய்கள் இருப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.