உலக அளவில் டி.பி. நோய் பாதிப்பில் இந்தியா முன்னிலை

உலக அளவில் டி.பி. நோய் பாதிப்பில் இந்தியா முன்னிலை
Updated on
1 min read

2014-ம் ஆண்டு ஆய்வு அறிக்கையின்படி, காசநோய் (டி.பி.) நோயாளிகளின் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா முன்னிலை வகிக்கிறது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் எய்ட்ஸ் நோய்க்கு இணையான ஆட்கொல்லி நோயாக இருக்கும் டி.பி.யால் 2014-ம் ஆண்டில் மட்டும் 15 லட்சம் மக்கள் இறந்திருக்கின்றனர்.

உலக சுகாதார மையத்தின் சர்வதேச டி.பி. நோய்க்கான 2015-ம் ஆண்டறிக்கை நேற்று வெளியானது. அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:

2014-ம் ஆண்டில் 96 லட்சம் மக்கள் புதிதாக டி.பி. நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 58 சதவீத மக்கள் தென் கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிஃபிக் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள்.

இதில் இந்தியா 23 சதவீத (22 லட்சம்) நோயாளிகளையும், இந்தோனேசியா மற்றும் சீனா தலா 10 சதவீத நோயாளிகளையும் கொண்டுள்ளது. நைஜீரியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அதிகளவில் டி.பி.யால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

டி.பி.யால் கடந்த வருடம் மட்டும் 15 லட்சம் மக்கள் இறந்திருக்கின்றனர். இதில் 1,40,000 குழந்தைகளும் அடங்குவர். இதில் பெரும்பான்மையான இறப்புகளைத் தவிர்த்திருக்க முடியும்.

ஹெச்ஐவியால் பாதிக்கப்படாத 80 சதவீத ஆப்பிரிக்க மற்றும் தென் கிழக்கு ஆசிய மக்கள், டி.பி.யால் இறந்திருக்கின்றனர்.

உலக அளவில் டி.பி. நோயால் இறப்பவர்களில், மூன்றில் ஒரு பங்கு மக்கள், இந்தியா மற்றும் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள்.

1990களைக் காட்டிலும் 2015-ல்டி.பி.யின் நோய்த்தாக்கம் 42 சதவீதம் குறைவாக இருக்கிறது.

1990களில் இருந்த நோய்த் தீவிரத்தைப் பாதியாகக் குறைக்கும் நோக்கம், மூன்று உலக சுகாதார மையத்தின் பிராந்தியங்களில் நிறைவேறிவிட்டது. அதாவது அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா, மேற்கு பசிஃபிக் பிராந்தியங்களிலும், பிரேசில், கம்போடியா, சீனா, எத்தியோப்பியா, இந்தியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், உகாண்டா மற்றும் வியட்நாம் நாடுகளிலும் இது 47 % குறைந்திருக்கிறது.

2007-க்குப் பிறகு, கவனிக்கத்தக்க டி.பி. நோய் அதிகரிப்பு 2014-ம் ஆண்டில் ஏற்பட்டிருக்கிறது.

2013-ம் ஆண்டில் 57 லட்சமாக இருந்த நோயாளர்கள் எண்ணிக்கை, இந்தியாவில் ஏற்பட்ட நோய் அதிகரிப்பு காரணமாக 2014-ல் 60 லட்சமாக உயர்ந்துள்ளது.

நோய் குறித்த முறையான விழிப்புணர்வு, தீவிரமான நோய்க்கு சர்வதேச தரத்தில் சிகிச்சை உள்ளிட்டவகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்.

டிபியின் ஒட்டுமொத்த ஆபத்தைக் குறைக்க, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு இடையே இருக்கும் இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.

முறையான ஆய்வும் சிகிச்சையும், 2000 முதம் 2015-ம் ஆண்டு வரை 43 மில்லியன் மக்களைக் காப்பாற்றி உள்ளன.

இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கான தகவல், 250 நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் மக்களிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in