

எனது அரசாங்கத்தை சாதி அரசாங்கம் என்று சொன்னார்கள்; ஆனால் தற்போது தனது சாதி அதிகாரிகளாகப் பார்த்து உயர் பதவியில் அமர்த்திக்கொண்டிருப்பவர்கள் யார் என்பதை இப்போது பார்க்கலாம் என்று உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ஆதம்பூர் ஸ்ரீ ராம் பி.ஜி கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் உ.பியின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதிக் கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார்.
கல்லூரி விழாவில் கலந்துகொண்டு அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
முதல் கட்ட தடுப்பூசி மருந்து லோடுகள் லக்னோவிற்கு வந்து சேர்ந்துள்ளன. ஏழைகளுக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது வழங்கப்படும்? இது இலவசமாக இருக்குமா அல்லது அதற்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டுமா என்று அரசாங்கம்தான் சொல்ல வேண்டும்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் குறைகளைத் தீர்க்க உச்ச நீதிமன்றம் நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. விவசாயிகளுக்கு எனது கட்சியின் ஆதரவை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன், புதிய வேளாண் சட்டங்களால் எல்லோரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
கோவிட் ஊரடங்கு காலத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துச் செல்ல மாநில அரசு எதுவும் செய்யவில்லை.
குஜராத், மகாராஷ்டிரா போன்ற இடங்களிலிருந்து குடியேறி உ.பியைச் சேர்ந்தவர்கள் சைக்கிள் மற்றும் கால்நடையாகவே வந்தனர், ஆனால் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் அவர்களுக்காக என்ன செய்தது? மாநிலத்தில் 90,000 பேருந்துகள் இருந்தன. அவர்களுக்கு அந்தப் பேருந்துகளை அனுப்பியிருந்தால், சாலைகளில் மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.
எனது அரசாங்கம் ஒரு சாதி அரசாங்கம் என்று அப்போது அழைக்கப்பட்டது. காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய பதவிகளில் தனது சாதியின் அதிகாரிகளை அடிக்கடி நியமிப்பதாக அன்று குற்றம் சாட்டினார்கள் , ஆனால் உண்மையில் தனது சாதி அதிகாரிகளாகப் பார்த்து பதவிகளில் அமர்த்திக்கொண்டிருப்பது யார் என்பதை நீங்கள் பார்க்கலாம், யார் எந்த அரசாங்க பதவியில் அமர வேண்டுமென யார் முடிவு செய்கிறார்கள் என்பதையும் இப்போது நீங்கள் பார்க்கலாம்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.