Last Updated : 13 Jan, 2021 11:28 AM

 

Published : 13 Jan 2021 11:28 AM
Last Updated : 13 Jan 2021 11:28 AM

அனுமதிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகள் தவிர மேலும் நான்கு கோவிட்-19 தடுப்பூசிகள் தயாராகின்றன: மத்திய அரசு தகவல்

பிரதிநிதித்துவப் படம்

இந்தியாவில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகள் தவிர, மேலும் நான்கு கோவிட்-19 தடுப்பூசிகள் தயாராகி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே தயாரான கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கோவிட்-19 தடுப்பூசிகள் இன்னும் சில தினங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இதன்மூலம் ஏறக்குறைய மூன்று கோடி சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கு முன்னுரிமை அளித்து இந்தியா தனது கோவிட் -19 தடுப்பூசி இயக்கத்தை ஜனவரி 16 முதல் தொடங்கவுள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தவிர, மேலும் நான்கு கோவிட் -19 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவற்றின் உற்பத்தியாளர்கள் விரைவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தை அணுகலாம் என்று சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷண் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:

இந்தியாவில் தற்போது வெளிவந்துள்ள தடுப்பூசிகள் தவிர மேலும் நான்கு தடுப்பூசிகள் தயாராகிவருகின்றன. ஜைடஸ் காடிலா, ஸ்புட்னிக் வி, பயோலாஜிக்கல் இ மற்றும் ஜெனோவா ஆகியவை தற்போது இந்தியாவில் மேம்பட்ட மருத்துவப் பரிசோதனை கட்டத்தில் இருக்கும் பிற தடுப்பூசிகள் ஆகும். வரவிருக்கும் நாட்களில், இந்தத் தடுப்பூசிகளில் சில, அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தை அணுக வாய்ப்புள்ளது.

இதில் சைடஸ் காடிலா தனது கரோனா வைரஸ் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவப் பரிசோதனைகளை டிசம்பரில் நிறைவுசெய்ததது. 3 ஆம் கட்டத்திற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கோவிட் -19 தடுப்பூசியின் 2 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகளும் முடிவடைந்துள்ளன, மேலும் 3 ஆம் கட்ட சோதனைகள் அதன் இந்திய பங்குதாரர் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, பயோலாஜிக்கல் இ தடுப்பூசியின் கட்டம் 1 மருத்துவப் பரிசோதனைகள் டிசம்பரில் தொடங்கப்பட்டது, கட்டம் 2 மார்ச் மாதத்தில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜெனோவாவின் M-RnA- அடிப்படையிலான கோவிட் 19 தடுப்பூசி தற்போது கட்டம் 1 இல் உள்ளது, இது 2 ஆம் கட்ட மருத்துவப் பரிசோதனைகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கும்.

இவ்வாறு மத்திய சுகாதாரச் செயலாளர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x