Last Updated : 13 Jan, 2021 07:29 AM

 

Published : 13 Jan 2021 07:29 AM
Last Updated : 13 Jan 2021 07:29 AM

உச்ச நீதிமன்றம் அமைத்த குழு வேளாண் சட்டங்களுக்கும், அரசுக்கும் ஆதரவானது; நாங்கள் ஆஜராகமாட்டோம்: விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டம்

விவசாயிகள் தலைவர் பல்பீர் சிங் ராஜ்வால் : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி


மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அமைத்த குழு வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானது, அரசுக்கு ஆதரவானது. அந்த குழுவின் முன் ஆஜராகமாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்்த்து கடந்த 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்காலத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல் வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்து தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழுவில், “ பாரதிய கிசான் யூனியன் தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா(மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசியஇயக்குநர் பிரமோத் குமார் ஜோஷி, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோரை நியமித்தது.

ஆனால், இந்த குழுவில் உள்ளவர்கள் அரசுக்கு ஆதரவானவர்கள், வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள். ஆதலால், குழுவின் முன் ஆஜராகமாட்டோம் என விவசாயிகள் சங்கத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சிங்கு எல்லையில் நேற்று விவசாயிகள் சங்கத்தினர் நிருபர்ளுக்கு கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது. விவசாயிகள் தலைவர் பல்பீர் சிங் ராஜ்வால் கூறுகையில் “ உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை அமைக்கக் கோரி விவசாயிகள் கேட்கவே இல்லை. இந்த திட்டத்துக்குப்பின்னால் மத்திய அரசு இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவில் உள்ள சார்பற்றவர்கள் அல்ல. வேளாண் சட்டங்கள் எவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவானது என எழுதியவர்கள். எங்கள் போராட்டம் தொடரும். எந்த குழுவின் கொள்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள். எங்கள் போராட்டத்தை திசைதிருப்ப மத்திய அ ரசு முயல்கிறது. 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடக்கும். உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த சட்டங்களை ரத்து செய்யட்டும். ” எனத் தெரிவி்த்தார்

மற்றொரு விவசாயி சங்கத் தலைவர் தர்ஷன் சிங் கூறுகையில் “ நாங்கள் எந்த குழுவின் முன்பும் ஆஜராகமாட்டோம். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்வு காணட்டும். எந்தக் குழுவும் தேவையில்லை. இந்த குழுவின் நோக்கமே போராட்டத்தைத் தணிக்கத்தான்” எனத் தெரிவித்தார்.

40 விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “ உச்ச நீதிமன்றம் தன்னுடைய சொந்த அறிவுக்கு உட்பட்டு குழுவை உருவாக்கியுள்ளது. இதைப் பற்றி வேறுஏதும் கூற விரும்பவில்லை. எந்தவிதமான குழுவும் தலையிட்டு பேசும் விவகாரத்தில் விவசாயிகள் சங்கத்துக்கு விருப்பமில்லை, நாங்களும் ஆஜராகமாட்டோம். இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள்,எழுதியவர்கள். எங்கள் பேச்சுவார்த்தை என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமும், அதன் கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டங்கள் குறித்துத்தான். பல்வேறு சக்திகள் மூலம் எங்கள் போராட்டத்தை வலுவிழக்கச் செய்கிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து இந்திய கிசான் சங்கார்ஷ் ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்ட அறிக்கையில் “ பல்வேறு சக்திகளால் நீதிமன்றம் தவறாக வழிநடத்தப்படுகிறது என தெளிவாகத் தெரிகிறது. நீதிமன்றம் அமைத்தகுழுவில் உள்ள 3 பேர் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள்.” எனத் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x