Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

வாட்ஸ் அப் பற்றி பரவும் தகவலில் உண்மை இல்லை: கொள்கை முடிவுகள் குறித்து நிறுவனம் விளக்கம்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அங்கமான வாட்ஸ் அப் குறித்து பரவி வரும் பல்வேறு தகவல்கள் உண்மையல்ல என்றும் அவை புரளி என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படும் என்றும் இது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு பகிரப்படாது என்றும் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் ஒருபோதும் தனிப்பட்ட தகவல்களை படிப்பது அல்லது அழைப்புகளை ஒட்டுக் கேட்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாது. இது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் பகிரப்படாது. வாட்ஸ்அப் மூலம் தகவல் மற்றும் அழைப்புகளை மேற்கொள்வதை தொடர்ந்து கண்காணிக்கும்.

வாட்ஸ் அப் ஒருபோதும் நீங்கள் இருக்குமிடத்தை பிறருக்கு பகிர்ந்ததில்லை. இது ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும் பகிரப்படாது. வாட்ஸ் அப் ஒருபோதும் உங்களது தொடர்புகளை ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு அளிக்காது. வாட்அப் குழுக்கள் தொடர்ந்து தனியாகவே நிர்வகிக்கப்படும். அனுப்பும் தகவல்களை மறையச் செய்யும் வசதி தொடர்ந்து இருக்கும். உங்கள் தகவல்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கில் விளம்பரம் பெறுவதற்கு தகவல்கள் ஒருபோதும் பகிரப்படாது. தனிநபர் தகவல் பகிர்வுகள் ஒரு முனையிலிருந்து மறு முனை சார்ந்தது. இதை இரு தரப்பினர் மட்டுமே படிக்க முடியும். அந்த தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் பார்க்க முடியாது.

தகவல்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என கருதினால் மறுமுனையில் உள்ளவருக்கு தகவல் அனுப்பிய உடன் அது மறைந்துபோகச் செய்யும் வசதியும் உள்ளது. இத்தகைய நடைமுறையை எவ்விதம் செயல்படுத்துவது என்பது தொடர்பான விவரங்கள் அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனாளர்கள் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் தங்களது தகவல் தொடர்பான விவரங்களை பகிர்ந்துகொள்வதற்கு ஒப்புதல் கேட்டு வருகிறது. இதனால் வாட்ஸ்அப் குறித்த புரளிகள் பல்வேறு விதமாக வெளியாகி வருகிறது. இதைத் தொடர்ந்தே இரண்டாவது கட்டமாக இத்தகைய விளக்கத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x