Published : 15 Oct 2015 07:49 AM
Last Updated : 15 Oct 2015 07:49 AM

பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் ஏன் தயக்கம்?- 3 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் ஏன் தயக்கம்? என்று மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ள உச்ச நீதிமன்றம், இதுகுறித்து 3 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஆல்பர்ட் அந்தோணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘விவாகரத்துச் சட்டம் 1869-ன் பிரிவு 10ஏ(1)-ன் படி, கிறிஸ்தவர்கள் இணக்க முறையில் விவாகரத்து பெற வேண்டும் என்றால், நீதிமன்ற உத்தரவுப்படி 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதன்பிறகே விவாகரத்து மனுவை சமர்ப்பிக்க முடியும். ஆனால், சிறப்பு திருமணச் சட்டம், இந்து திருமணச் சட்டம், பார்சி திருமணச் சட்டம், விவாகரத்து சட்டம் ஆகியவற்றின் படி, ஓராண்டு பிரிந்திருந்தால் போதுமானது.

கிறிஸ்தவர்களுக்கு மட்டும் 2 ஆண்டு பிரிவு என்பது பாரபட்சமானது. கிறிஸ்தவர்களுக்கு எதிரான சட்டப் பிரிவாகும். இப்பிரிவு செல்லாது என்று கேரளா மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றங்கள் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளன. ஆனால், மற்ற மாநிலங்களில் இச்சட்டப்பிரிவு பாரபட்சமாக உள்ளது. எனவே, இச்சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

விவாகரத்து சட்டத்தில் திருத்தம்

இம்மனு விசாரணைக்கு வந்தபோது, விவாகரத்து சட்டப் பிரிவு 10ஏ(1)-ஐ திருத்தி, அனைவருக்கும் பொதுவான நடைமுறையை கொண்டு வர வேண்டும். இதுகுறித்து மத்திய சட்டத்துறை அமைச்சகம் முடிவெடுத்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு மத்திய அரசு சார்பில் சம்மதம் தெரி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்ஜித் சிங், சிவ கீர்த்தி சிங் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு சார்பில் எந்த பதிலும் தாக்கல் செய்யாததால், அதிருப்தியடைந்த நீதிபதிகள், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவான சட்ட விதிகளை இயற்றுவது அரசின் கடமை. அதை ஏன் செய்ய முடியவில்லை.

நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் சட்ட உரிமைகளில் மதம் தலையிட கூடாது. மத உரிமைகள் அதில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்து திருமணச் சட்டத்தில் வழங்கப்படும் உரிமையை தனக்கும் வழங்கும்படி மனுதாரர் கோருகிறார்.

இதில் என்ன தவறு? பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் என்ன தயக்கம். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படாததால், விவாகரத்து விஷயத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. மத்திய அரசுக்கு அளித்த கால அவகாசம் முடிந்த பின்பும் ஏன் முடிவெடுக்க தயங்குகிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பினர்.

அவகாசம் அளிக்க வேண்டும்

அப்போது வேறு வழக்கு ஒன்றுக்காக ஆஜாராகி இருந்த சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமாரை அழைத்து மத்திய அரசின் நிலை குறித்து கேட்டனர். அதற்கு அவர் இந்த வழக்கு குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆவணங்களை படித்துப் பார்த்து, மத்திய அரசிடம் இருந்து கருத்து பெற வேண்டும் என்பதால் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.

இதையடுத்து, விவாகரத்து சட்டத்தை திருத்தி, பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு 3 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x