மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் கார் விபத்தில் படுகாயம்: மனைவி உள்பட இருவர் பலி

மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட காட்சி: படம் | ஏஎன்ஐ.
மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்ட காட்சி: படம் | ஏஎன்ஐ.
Updated on
1 min read

கர்நாடக மாநிலம், உத்தர கன்னட மாவட்டத்தில் நேற்று நடந்த கார் விபத்தில் மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயமடைந்தார். அவரின் மனைவி உள்பட இருவர் பலியானார்கள்.

68 வயதான மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் மிகவும் ஆபத்தான நிலையில் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக், அவரின் மனைவி விஜயா, உதவியாளர் தீபக், பாதுகாவலர் ஆகியோர் வடக்கு கர்நாடகாவில் உள்ள எல்லாப்பூர் சென்றனர். அங்கிருந்து நேற்று இரவு கோகர்னாவுக்குப் புறப்பட்டுள்ளனர். அப்போது அங்கோலா மாவட்டம், கோஹசம்மி எனும் கிராமத்தில் கார் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலை ஓர மரத்தில் மோதி கவிழ்ந்தது.

மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக்: கோப்புப் படம்.
மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக்: கோப்புப் படம்.

இந்த விபத்தில் மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் படுகாயமடைந்தார். அவரின் மனைவி விஜயா, உதவியாளர் தீபக் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மத்திய அமைச்சர் ஸ்ரீபட் நாயக் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் உடனடியாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். மருத்துவக் கல்லூரி டீன் சிவானந்த் பண்டேகருடன் ஆலோசனை நடத்திய சாவந்த், மத்திய அமைச்சருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்துக் கேட்டறிந்தார்.

இந்த விபத்துக் தகவல் அறிந்த பிரதமர் மோடி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்தைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் ஸ்ரீபட் நாயக்கின் உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கோவா முதல்வருடன் தொலைபேசியில் பேசி, ஸ்ரீபட் நாயக்கின் உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தார்.

கோவா பாஜக தலைவர் சதானந்த் தனவாடே, பொதுச் செயலாளர் சதீஸ் தனோட் உள்ளிட்டோர் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in