கோவிஷீல்ட் மருந்து முதல் லோடு புறப்பட்டது; 3 லாரிகள், 478 பெட்டிகள்: சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து 13 நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது

புனே சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட கோவிஷீல்ட் மருந்து லோடுகள்: படம் | ஏஎன்ஐ.
புனே சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து இன்று அதிகாலை புறப்பட்ட கோவிஷீல்ட் மருந்து லோடுகள்: படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் முகாம் வரும் 16-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதற்குத் தேவையான தடுப்பூசிகள் இன்று புனே நகரில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து இன்று அதிகாலை 13 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சீரம் மருந்து நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதலுக்கான ஆர்டர்களை மத்திய அரசு நேற்று வழங்கியது. இதன்படி இரு மருந்து நிறுவனங்களிடம் இருந்து 6 கோடி டோஸ் கோவிஷீல்ட் மருந்துகளுக்கு ஆர்டர் தரப்பட்டுள்ளன.

வரும் 16-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கும் கரோனா தடுப்பூசி போடும் முகாமில் முதல் கட்டமாக 3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, அடுத்த சில மாதங்களில் நாட்டில் 30 கோடி மக்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், இதுவரை உலக அளவில் 50 நாடுகளில் 2.5 கோடி மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புனேவில் மஞ்சரி பகுதியில் உள்ள சீரம் மருந்து நிறுவனத்திலிருந்து குளிர்பதனவசதி செய்யப்பட்ட 3 டிரக்குகளில் முதல் கோவிஷீல்ட் மருந்து லோடு ஏற்பட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு விமான நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டன.

ஒவ்வொரு டிரக்கிலும் 478 பெட்டிகள் ஏற்றப்பட்டுள்ளன. ஒரு பெட்டியின் எடை 32 கிலோ என்று மருந்து நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிரக்குகள் அனைத்தும் புறப்படும் முன் வழக்கமான பூஜைகள் செய்யப்பட்டன. விமான நிலையத்திலிருந்து 13 நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு காலை 11 மணிக்குள் சென்றடையும் எனத் தெரிகிறது.

இந்த கோவிஷீல்ட் மருந்துகள் புனேவிலிருந்து விமானம் மூலம் டெல்லி, அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, கர்னால், ஹைதராபாத், விஜயவாடா, குவஹாட்டி, லக்னோ, சண்டிகர், புவனேஷ்வர் ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். 8 பயணிகள் விமானம் மூலமும், 2 சரக்கு விமானங்கள் மூலமும் இந்த மருந்துகள் அந்தந்த நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்லப்படும் கோவிஷீல்ட் மருந்துகள் ஹைதராபாத், விஜயவாடா, புவனேஷ்வர் நகரங்களுக்கும், 2-வது சரக்கு விமானம் கொல்கத்தா, குவஹாட்டி நகரங்களுக்கும் செல்லும்.

மும்பைக்குத் தேவையான மருந்துகள் அனைத்தும் சாலை மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட உள்ளன.

அகமதாபாத் நகருக்கு ஏர் இந்தியா சரக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் அந்தந்த நகரங்களில் இன்று காலை 11 மணிக்குள்ளாக கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in