

இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலை ரூ.210 என்று சீரம் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி திட்டம், வரும் 16-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளை பொதுமக்களுக்குச் செலுத்த அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் -அஸ்ட்ரா ஜெனிகாநிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 'கோவிஷீல்ட்' தடுப்பூசிக்கான விலையை, அதனை இந்தியாவில் தயாரித்து வரும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு முதல் கட்டமாக ஒரு கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில் ஒரு தடுப்பூசியின் விலை ரூ.210 என அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இத்தகவலை சீரம் இன்ஸ்டிடியூட் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “கடந்த நவம்பரில் கோவிஷீல்ட் தடுப்பூசி விலை ரூ.1,000 ஆக இருக்கும் என்று தெரிவித்தோம். இது தனியாருக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை. அதே நேரத்தில் அரசுக்கு ரூ.250 விலையில் கொடுக்க அப்போது முடிவு செய்திருந்தோம். தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு ரூ.210 விலையில் கொடுக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் மத்திய அரசுடன் மட்டுமே சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது. தனியாருக்கு தடுப்பூசிகளை வழங்கும்பட்சத்தில் இதைவிட அதிகமான விலைக்கு அந்த நிறுவனம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும்3 கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோர், இணை நோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் எனமொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
கோவிஷீல்டை போலவே பாரத்பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் தடுப்பூசியும் கொள்முதல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி சீரம் நிறுவனம் 5 கோடி தடுப்பூசிகளைத் தயாராக வைத்துள்ளது. உலகெங்கிலும் 150 நாடுகளிடம் இருந்து இந்த கோவிஷீல்ட் தடுப்பூசிகளைக் கேட்டு ஆர்டர்கள் வந்துள்ளதாக சீரம் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.