

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக உருவாக உள்ள அமராவதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் உள்நாட்டு முக்கிய பிரமுகர்கள் மட்டுமல்லாது வெளி நாடுகளிலிருந்தும் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
புதிய ஆந்திர மாநிலத்தின் தலைநகராக, விஜயவாடா- குண்டூர் இடையே கிருஷ்ணா நதிக்கரை ஓரம் சர்வதேச தரத்தில் அமராவதி நகரம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று குண்டூர் மாவட்டம், தூளூர் மண்டலம், உத்தண்டராயுனி பாளையத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் ஜப்பான் அமைச்சர் யோசுகே டகாகி, சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், மற்றும் பல மத்திய, மாநில அமைச்சர்கள், பல மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், நீதிபதிகள், பல வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், பல துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ள 500 ஏக்கர் பரப்பளவு நிலம் போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்யப்பட்டது.
இதில் 80 அடி நீளம், 60 அடி அகலத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மேடைக்கு அருகே இரு புறமும் சுமார் 350 பிரமுகர்கள் உட்காரும் வகையில் 2 மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று காலை 9 மணி முதல் கணபதி ஹோமம் மற்றும் ஹோம பூஜைகள் நடைபெற உள்ளன. பின்னர் மதியம் 12.36 மணியிலிருந்து 12.43 மணிக்குள் அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
ஆந்திரா உட்பட நாடு முழுவதிலும் இருந்து புனித நீர், மண் ஆகியவை சேகரித்து கொண்டுவரப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு பின்பு
தெலங்கானா போராட்டம் தீவிரமானதிலிருந்து தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆந்திரா பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில், அமராவதி அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேரில் சென்று சந்திரசேகர ராவுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அவர் இவ்விழாவில் கலந்து கொள்கிறார். இதன்மூலம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஆந்திராவில் அடி எடுத்து வைக்க உள்ளார்.
ரஜினி அனுப்பிய பஸ்கள்
அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் 2 நவீன சொகுசு பஸ்களை அனுப்பி வைத்துள்ளார். விஜயவாடாவில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரமுகர்கள், இந்த பஸ்கள் மூலம் அமராவதிக்கு அழைத்து செல்லப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ரஜினிகாந்த் இவ்விழாவில் கலந்து கொள்வது குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.