பிஹார் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 130 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு

பிஹார் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் 130 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவை முதல் கட்டத் தேர்தல் அக்டோபர் 12-ம் தேதி நடைபெறுகிறது. இதில் கொலை உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் குற்றங்களில் தொடர் புடைய 130 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

மொத்தமுள்ள 243 தொகுதி களில் 49 தொகுதிகளுக்கு முதல் கட்டத்தில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மொத்தம் 583 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த வேட்பாளர்களின் பிரமாணப்பத்திரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலிருந்து பெற்ற அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ் (ஏடிஆர்) என்ற அமைப்பு, அவற்றை ஆய்வு செய்து வேட்பாளர்கள் பற்றி அறிக்கை தயார் செய்தது. 170 வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 தொகுதிகளில் போட்டி யிடும் 130 வேட்பாளர்கள் ஜாமீனில் வரமுடியாத மோசமான கிரிமினல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

தன் மீது கொலை சம்பந்தமாக 4 வழக்குகள் இருப்பதாக பிரமாணப்பத்திரத்தில் வர்சாலிகஞ்ச் தொகுதியில் போட்டியிடும் பிரதீப் குமார் என்ற வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் உட்பட மொத்தம் 16 வேட்பாளர்கள் மீது கொலை வழக்கு உள்ளது.

7 சுயேச்சை வேட்பாளர்கள் மீதும் கொலை வழக்கு உள்ளது. மொத்தம் 37 வேட்பாளர்கள் கொலை முயற்சி வழக்கை எதிர் கொள்பவர்கள்.

ஹிசுவா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டி யிடும் ராம்ஸ்வரூப் யாதவ் மீது கொலை முயற்சி தொடர்பாக 5 புகார்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக, ஜன் அதிகார் கட்சி (லோக்தந்திரிக்) ஆகிய கட்சிகளில் தலா ஒருவரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் 3 வேட்பாளர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள 3 அல்லது அதற்கு அதிகமான வேட்பாளர்கள் 37 தொகுதிகளில் போட்டியிடுவதை கண்டறிந்துள்ள ஏடிஆர் அமைப்பு இந்த தொகுதிகளை கவனத்துடன் கையாள வேண்டிய தொகுதிகள் (ரெட் அலர்ட்) என வகைப்படுத்தியுள்ளது.

கோடீஸ்வரர்கள்

முதல் கட்டத் தேர்தலில் போட்டியிடுபவர்களில் 146 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள். இது மொத்தமுள்ள 583 வேட்பாளர்களில் 25 சதவீதம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in