

மேற்குவங்கத்தில் நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதற் கிடையே, தேர்தலில் முறைகேடு நடை பெற்றதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றம்சாட்டி உள்ளது.
பிதான் நகர் மற்றும் அசன்சோல் நகராட்சிகள் மற்றும் சிலிகுரி மஹுகும்பா பரிஷத் ஆகியவற்றுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் எஸ்.ஆர்.உபாத்யாயா கூறிய தாவது:
உள்ளாட்சித் தேர்தலில் பகல் 1 மணி வரையில் சராசரியாக 40 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் சிலிகுரி மற்றும் பிதான் நகரில் 43 சதவீதமும் அசன்சோல் நகராட்சியில் 47 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன. சில இடங்களில் வாக்குப் பெட்டியை கைப்பற்ற முயன்றதாகவும் இதனால் வன்முறை சம்பவங்கள் நடை பெற்றதாகவும் அனைத்து அரசியல் கட்சிகளிடமிருந்தும் புகார்கள் வந்துள்ளன. சில இடங்களில் பத்திரிகையாளர்கள் மீதும் தாக்குதல் நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சி, ஆதாரங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரி வித்தார். பிதான் நகர் தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேடு செய்ததுடன் வன்முறையில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதைக் கண்டித்து பிதான் நகர்-ரஜரஹத் பகுதியில் திங்கள்கிழமை 12 மணி நேர பந்த் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
குண்டுவெடிப்பில் 2 காங்கிரஸார் பலி
உள்ளாட்சித் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளுக்கிடையே மோதல் போக்கு நிலவுகிறது. சில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, முர்ஷிதாபாத் மாவட்டம் பதர்கட்டா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 காங்கிரஸார் பலியாயினர்.
மேற்குவங்க சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் கருதப்படுகிறது. எனவே, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளான இடதுசாரிகள் மற்றும் பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது