Published : 12 Oct 2015 08:43 AM
Last Updated : 12 Oct 2015 08:43 AM

அவசர நிலையால் புதிய அரசியல் உதயமானது: பிரதமர் நரேந்திர மோடி கருத்து

கடந்த 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனத்தால் நாட்டில் புதிய தலைமுறை அரசியல் உதயமானது, புதிய அரசியல் தலைவர்கள் தோன்றினார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஜெயபிரகாஷ் நாராயண் 113-வது பிறந்த தின விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இவ்விழாவில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஆளுநர்கள் கல்யாண் சிங், ஓ.பி.கோலி, பலராம் தாஸ் டாண்டன், வல்லபாய் வாலா மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் வி.கே. மல்ஹோத்ரா, சுப்பிரமணியன் சுவாமி, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் டி.பி. திரிபாதி உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் பிரதமர் மோடி பேசிய தாவது: கடந்த 1975-ல் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்தை ஜனநாயகத்தின் மீது விழுந்த பேரிடியாகவே கருத வேண்டும். அப்போது ஏற்பட்ட சிக்கலால் இந்திய ஜனநாயகம் இன்னும் வலுப்பெற்றது.

ஜெ.பி. இயக்கத்தால் புதிய தலைமுறை அரசியல் உதயமானது, புதிய அரசியல் தலைவர்கள் தோன்றினார்கள். எனவே அவசர நிலை பிரகடனத்தை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயக அமைப்பையும் கோட்பாடுகளையும் மேலும் வலுப்படுத்திட முடியும்.

அவசர நிலை பிரகடன அமலை எதிர்த்துப் போராடியவர்களுக்கு நாம் நன்றிகடன்பட்டுள்ளோம். அந்த காலகட்டத்தில் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் மூலம் பலர் ஊக்கம் பெற்றனர். அவர் ஒரு கலங்கரை விளக்கம், உதாரண புருஷர்.

ஜெயபிரகாஷ் நாராயண் மிகவும் அமைதியானவர். ஆனால் அவரது பேச்சுகள் எரிமலை குழம்புகள் போல் வெடித்துச் சிதறின. அவர் கடைசிவரை உண்மைக்காக வாழ்ந்தார். நாட்டின் ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோரின் வீடுகளுக்கு பிரதமர் மோடி சென்றார். அவர்கள் இருவரும் அவசர நிலை காலத்தின்போது ஜனநாயகத்துக்கு போராடிய முக்கிய தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x