மிக நீண்ட தூர விமானத்தை இயக்கி நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்: பெண் விமானிகளுக்கு ராகுல் காந்தி பாராட்டு 

ராகுல் காந்தி | கோப்புப் படம்.
ராகுல் காந்தி | கோப்புப் படம்.
Updated on
1 min read

மிக நீண்ட தூர விமானத்தை இயக்கி நீங்கள் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள் என்று ஏர் இந்தியாவின் ஏஐ 176 விமானத்தை இயக்கிய பெண் விமானிகளுக்கு ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோவுக்கும், பெங்களூருக்கும் இடையிலான வான்வழி தூரம் உலகின் மிக நீளமான ஒன்றாகும். 13,993 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையைத் தொடங்கத் திட்டமிட்டது. அதன்படி ஏர் இந்தியாவின் ஏஐ176 விமானம் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்டது. இது திங்கட்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு (உள்ளூர் நேரம்) கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஏர் இந்தியாவின் மிக நீண்ட இந்த விமானப் போக்குவரத்தை பெண் விமானிகள் மட்டுமே இயக்கி சாதனை படைத்துள்ளனர். கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர் மற்றும் கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோரைக் கொண்ட காக்பிட் குழு இந்த விமானத்தை இயக்கியது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று கூறியதாவது:

"சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவுக்கு வட துருவத்தின் மீது ஏர் இந்தியாவின் மிக நீண்ட தூர விமானத்தை இயக்கி முடித்த பெண்கள் காக்பிட் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நீங்கள் நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்".

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in