

''ஜெய் ஜவான் ஜெய் கிசான்'' என்று முழங்கிய லால் பகதூர் சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்துங்கள்; புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்கள் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அம்மாநிலத்தின் உத்தரப் பிரதேசம், ஹரியாணா மற்றும் பஞ்சாப் எல்லைகளில் இந்தப் போராட்டம் 47-வது நாளாகத் தொடர்கிறது.
இதற்கிடையில் டெல்லியில் போராடும் விவசாயிகளை உடனடியாக அப்புறப்படுத்தக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 55-வது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்தியுள்ள மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி, விவசாயிகளைப் பற்றி முழங்கிய சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக வேளாண் சட்டங்களை ரத்து செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது:
"முன்னாள் பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரிக்கு அவரது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துங்கள். 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற தூண்டுதலான முழக்கத்தை அவர் நமக்குக் கொடுத்தார். விவசாயி சகோதர, சகோதரிகளை நினைத்து நாம் பெருமைப்படுகிறோம். விவசாயிகள் நம் தேசத்தின் ஹீரோக்கள். விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை இப்போதாவது மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்!''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.