Last Updated : 11 Jan, 2021 12:11 PM

 

Published : 11 Jan 2021 12:11 PM
Last Updated : 11 Jan 2021 12:11 PM

மகாராஷ்டிராவிலும் பறவைக் காய்ச்சல் உறுதி: பாரபானி மாவட்டத்தில் 900 கோழிகள் திடீர் பலி

நாட்டில் கரோனாவுக்கு அடுத்தபடியாக மெல்லப் பரவி வரும் பறவைக் காய்ச்சல் 9-வது மாநிலமாக மகாராஷ்டிராவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பாரபானி மாவட்டத்தில் ஒரு கோழிப் பண்ணையில் திடீரென 900 கோழிகள் உயிரிழந்துள்ளன.

இதையடுத்து, அந்தக் கோழியின் மாதிரிகளைப் பரிசோதித்த மாவட்டக் கால்நடை பராமரிப்புத்துறை, பறவைக் காய்ச்சலால் கோழிகள் உயிரிழந்தன என்பதை உறுதி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து பாரபானி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் 8 ஆயிரம் கோழிகளைக் கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே பறவைக் காய்ச்சல், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பரவிய நிலையில் தற்போது மகாராஷ்டிராவிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரபானி மாவட்ட ஆட்சியர் தீபக் முகிலிகர் கூறுகையில், “முரும்பா கிராமத்தில் சுய உதவிக் குழுவினரால் நடத்தப்பட்டு வந்த கோழிப் பண்ணையில் திடீரென சனிக்கிழமை 900க்கும் மேற்பட்ட கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

உடனடியாக கோழிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் கோழிகள் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்தன என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கோழிப் பண்ணையைச் சுற்றி, ஒரு கி.மீ. சுற்றளவில் உள்ள 8 ஆயிரம் பறவைகளைக் கொல்ல முடிவு செய்துள்ளோம்.

மேலும் இந்த கிராமத்தைச் சுற்றி 10 கி.மீ. சுற்றளவுக்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்குள் யாரும் பறவைகளைக் கொண்டுவரவோ, கொண்டு செல்லவோ அனுமதியில்லை.

மாவட்ட மருத்துவக் குழுவினர் இந்த கிராமத்தில் முகாமிட்டுள்ளனர். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் பீதியடையத் தேவையில்லை” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே நாட்டில் உள்ள அனைத்து வன உயிரியல் பூங்காக்களும், மிருகங்கள் உடல்நிலை குறித்து நாள்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய வன உயரியில் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x