

துவாரகா விரைவுச் சாலை பணிகளை 2022 செப்டம்பருக்குள் முடிக்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியையும் ஹரியாணா வையும் இணைக்கும் வகையில் 29 கி.மீ. தூரத்துக்கு துவாரகா விரைவுச் சாலை அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2019-ம் ஆண்டு மார்ச்மாதம் நடந்தது. இது 8 வழிச்சாலை திட்டமாகும். டெல்லி - குர்கான் இடையே இணைப்பை ஏற்படுத்தும் இந்தச் சாலை, டெல்லி - ஹரியாணா இடையே போக்குவரத்து நெரிலைக் குறைக்கும்.
இந்நிலையில், அரசுத் திட்டங்கள் செயல்பாடு மற்றும் குறித்தநேரத்தில் அமலாக்கம் ஆகியவற்றை கவனிக்கும் ‘பிரகதி’ அமைப்பின் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 30-ம் தேதி நடந்தது. துவாரகா விரைவுச் சாலை திட்டம் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது, முடிக்க வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார். பின்னர், 2022 செப்டம்பர் மாதத்துக்குள் துவாரகா விரைவுச் சாலை திட்டப் பணிகளை முடிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.
இதனிடையே, ஹரியாணாவில் அமைக்கப்படும் 19 கி.மீ. நீளமுள்ள சாலை இந்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள்ளும் டெல்லியில் இருந்து ஹரியாணாவை நோக்கிச்செல்லும் சுமார் 10 கி.மீ. நீளமுள்ள பாதை 2022 செப்டம்பர்மாதத்துக்குள்ளும் அமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.