திருக்குறள் உட்பட 12 தமிழ் இலக்கியங்களை இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியிடுகிறது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம்

திருக்குறள் உட்பட 12 தமிழ் இலக்கியங்களை இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியிடுகிறது மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முயற்சியால் தொடங்கப்பட்ட மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், முழுநேர இயக்குநர் இன்றி சர்ச்சையில் சிக்கியது.

இந்தப் பதவியில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரியில் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். இன்னும்கூட செம்மொழி நிறுவனம் சார்பிலான குடியரசுத் தலைவர் விருது மற்றும் கலைஞர் விருதுகள் பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் அந்த நிறுவனத்தில் இந்தி, தெலுங்கு உட்பட 10 மொழிகளில்திருக்குறள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் உள்ளிட்ட 12 தமிழ்இலக்கியங்களின் பதிப்புகளும் வெளிவராமல் சுமார் 9 ஆண்டுகளாக முடங்கின.

இந்நிலையில் இப்பணி 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும்தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு செம்மொழிகள் தொடர்பான மத்திய அரசு அதிகாரிகளின் சமீபத்திய கூட்டத்தில் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு மத்தியகல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பாராட்டு தெரிவித்தார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, ‘‘குறுகிய காலத்தில் இவ்வளவு மொழிபெயர்ப்புகளை எந்த மத்திய நிறுவனமும் முடித்ததில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

முதல் முறையாக மத்திய அரசின் செம்மொழி மீதான நூல்கள் அமேசானின் அச்சு மற்றும் கிண்டில் பதிப்புகளாகவும் வெளியிடப்பட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் விற்பனையாவதாகவும் தெரிவித்தார். இதனால், தமிழாய்வு நிறுவனத்துக்கான நூல்களின் வெளியீட்டு செலவை வழங்கி தாமதம் இன்றி வெளியிட வேண்டும் எனவும் எங்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்“ என்று தெரிவித்தனர்.

இதனிடையே திருக்குறளை 22 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் தனி திட்டத்தை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு மத்திய கல்வி அமைச்சகம் வழங்கி இருந்தது. இவற்றில், பஞ்சாபி, மணிப்புரி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தி, மலையாளம், உருது, சம்ஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, அரபி, நரிக்குறவர் மொழியான வாக்ரி போலி ஆகியவற்றில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த நூல்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in