Last Updated : 27 Jun, 2014 08:37 AM

 

Published : 27 Jun 2014 08:37 AM
Last Updated : 27 Jun 2014 08:37 AM

கபினி அணை நிரம்பியதால் தண்ணீர் திறப்பு: கேரளம், கர்நாடகத்தில் கனமழை

கேரள மாநில‌ம் வயநாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால்,கர்நாடக மாநில‌த்தில் உள்ள கபினி அணை கடந்த புதன்கிழமை இரவு நிரம்பியது. அணையிலிருந்து நொடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள பக்ரம்தலம் என்ற மலைப் பகுதியில் தோன்றிய கபினி ஆறு கர்நாடகத்தில் பாய்ந்து காவிரியில் கலக்கிறது.இதனால் வயநாட்டில் மழைப் பொழிவு அதிகமானால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகும்.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக வயநாட்டில் தென் மேற்கு பருவ மழை பெய்ததால் கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டத்தில் உள்ள பிச்சனஹள்ளி மற்றும் பிதரஹள்ளி மலை களுக்கு இடையே உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வந்தது. மொத்தம் 19.52 டிஎம்சி கொள்ளவு கொண்ட அணையில் வியாழக்கிழமை மாலை நிலவரப் படி 19.18 டிஎம்சி நீர் இருப்பு இருந்தது.

எனவே வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து நொடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

கபினி அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிலிகுண்டுலு வழியாக தமிழக எல்லைக்குள் நுழைந்தது.இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக கர்நாடகா வில் தென்மேற்கு மழை கணிசமாக குறைந்திருப்பதால்,காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் காவிரியின் குறுக்கே அமைந் திருக்கும் கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஹேமாவதி,ஹாரங்கி மற்றும் காவிரியின் துணை ஆறுகளிலும் நீர்வரத்து குறைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 90.20 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 124.80 அடி) அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18,930 கனஅடி நீராகவும்,வெளியேறும் நீர் வினாடிக்கு 150 கன அடி நீராகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கும் கர்நாடகா விற்கும் இடையே காவிரி மேலாண்மை வாரியம் குறித்த சிக்கல் நீடித்துவரும் வேளையில், கபினியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு 4000 கன அடி நீர் வரத்து

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நேற்று 4000 கன அடி நீர் வரத்து இருந்தது.

நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்ததால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 22ம் தேதி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 322 கன அடியாக இருந்தது.

நேற்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 43.08 அடியாகவும், அணைக்கு விநாடிக்கு 4,141 கன அடி நீர் வரத்தும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 13.73 டிஎம்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x