ஜான்சி தொகுதியில் இருந்து விலக மாட்டேன்: உமாபாரதி அறிவிப்பு
உத்தரப் பிரதேசம், ஜான்சி தொகுதி போட்டியில் இருந்து விலக மாட் டேன், வேண்டுமானால் 2-வது தொகுதியாக ராய்பரேலியில் சோனியா காந்தியை எதிர்த்துப் போட்டியிட தயார் என பாஜக மூத்த தலைவர் உமாபாரதி அறிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக ஆதரவாளரான யோகி ராம்தேவ், ‘இந்த நாட்டை சுரண்டிய சோனி யா கண்டிப்பாக தோற்கடிக்கப்பட வேண்டும். இதற்கு சரியான வேட்பாளர் உமாபாரதி. அவர் ராய்பரேலியில் போட்டியிட வேண் டும் என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த உமா பாரதி, சகோதரர் ராம்தேவ் எனக்கு நல்ல யோசனைகளையே கூறுவார். ஆனால் ஜான்சியில் பிரச்சாரத்தை தொடங்கி விட்டதால் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் உமாவை ஜான்சியில் இருந்து ராய்பரேலிக்கு மாற்றுவதற்கு தீவிரமாக பரி சீலனை செய்யப்பட்டு வரு வதாக அதன் முன்னாள் தேசிய தலைவரான வெங்கய்யா நாயுடு ஹைதராபாதில் தெரிவித் திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஜான்சியில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்த உமாபாரதி கூறியதாவது:
எந்தக் காரணம் கொண்டும் ஜான்சி தொகுதி போட்டியில் இருந்து விலக மாட்டேன். வேண்டுமானால் இரண்டாவது தொகுதியாக ராய்பரேலியில் சோனியாவை எதிர்த்துப் போட்டி யிடத் தயார்.’ என அவர் அறிவித்தார். இதற்கு முன் அவர் போபாலில் போட்டியிட விரும்பியதாக வந்த செய்திகள் பொய்யானவை எனவும், அவை தமக்கு எதிராக மத்தியப் பிரதேசத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் கிளப்பி விட்ட வதந்தி என்றும் மாநில முதல் வரான சிவராஜ்சிங் சவுகானின் பெயரை குறிப்பிடாமல் அவர் குற்றம் சுமத்தினார்.
இதற்கிடையே பாஜக செய்தி தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கூறுகையில், ‘‘உமாபாரதி ஜான்சி தொகுதியில் மட்டுமே போட்டி யிடுவார்’’ என்று கூறி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அமேதியில் ராகுலை எதிர்க்கும் ஸ்மிருதி ராணி
உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் துணைத்தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்தும் ஒரு வலுவான வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என பாஜகவிற்கு வற்புறுத்தல் வலுத்து வருகிறது. பாஜகவின் மாநிலங்களவை எம்பியும் தொலைக்காட்சி நடிகை யுமான ஸ்மிருதி ராணியை நிறுத்த வேண்டும் என மாநில பாஜகவினர் கோரியுள்ளனர்.
