இன்று மறந்தால் ரூ.10 ஆயிரம் அபராதம்: 2019-20 ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read


2019-20ம் நிதியாண்டுக்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. தாமதமாகக் கணக்கு தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை எச்சரி்க்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அபராதம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் வழக்கமாக ஜூலை 31-ம் தேதி முடிந்துவிடும். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக காலக்கெடு இரு முறை நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 31-ம் நாளை கடைசித் தேதியாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது, அதுமேலும் நீட்டிக்கப்பட்டு 2021, ஜனவரி 10-ம் தேதியாக நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி சட்டத்தின்படி, 60 வயதுக்கு குறைந்த தனிநபர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம். அதேசமயம் 60 முதல் 80 வயது வரையிலான மூத்த குடிமக்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது அவசியம்.

தற்போது 2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.

ஆகையால் இதுவரை வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்தாவர்கள் இன்றைக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இன்று தவறவிடும்பட்சத்தில் தாமதமாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அந்த கடந்த ஆண்டு அபராதமாக ரூ.5 ஆயிரம் விதிக்கப்பட்டது.

மேலும், நிறுவனங்கள், தனி நபர்களின் கணக்குகள் ஆகியவை கணக்குத் தணிக்கையாளர்கள் மூலம் தணிக்கை செய்யப்படுவதாக இருந்தால், அவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலம் 2021, பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட காலக்கெடு 2021, ஜனவரி 31-ம் தேதியாக இருந்தது. இது கூடுதலாக 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 28-ம் தேதி வரை 2019-20ஆம் நிதியாண்டுக்கான ரிட்டர்ன் 4.54 கோடி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2018-19ஆம் நிதியாண்டோடு ஒப்பிடும்போது குறைவாகும், 2018-19ஆம் நிதியாண்டில் 4.77 கோடி வரிமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல, விவாத் சே விஸ்வாஸ் திட்டத்தின் கீழ் ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடுவும் 2021, ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.2019-20ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யும் காலக்கெடுவும் 2021, பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in