Published : 10 Jan 2021 08:12 AM
Last Updated : 10 Jan 2021 08:12 AM

குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்: ஜே.பி. நட்டா திட்டவட்டம்

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா : படம் |ஏஎன்ஐ

கொல்கத்தா


பாஜக கூறியபடி குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை, திட்டவட்டமாக நடைமுறைப்படுத்தும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உறுதிபடத் தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா மேற்கு வங்கத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். அங்குள்ள பர்தமான் மாவட்டத்தில் பேரணி மேற்கொண்ட ஜே.பி. நட்டா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் சிஏஏ சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமா என்று கேட்டனர்.

அதற்கு ஜே.பி. நட்டா பதில் அளிக்கையில், “ பாஜக கூறியபடி குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளோம், அதற்கான காலக்கெடு இன்னும் உறுதியாகவில்லை, அதுகுறித்து உள்துறை அமைச்சகம்தான் உரிய பதில் அளிக்கும்”எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் ஒருவேளை பாஜக ஆட்சிக்கு வந்தால், லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படுமா என நிருபர்கள் கேட்டனர்.அதற்கு நேரடியாக பதில் அளிக்க நட்டா மறுத்துவிட்டார். அதற்கு மாறாக, “ நாங்கள் ஊடுருவல்காரர்களுக்கு எதிரானவர்கள்” எனத் தெரிவித்தார்.

அதன்பின் ஜே.பி. நட்டா பேசுகையில் “ மேற்கு வங்க மாநிலம் ஏற்கெனவே மாற்றத்துக்கு தயாராகிவிட்டது. கடந்த ஒரு மாதத்துக்கு முன், நான் வந்திருந்தபோதே, மக்கள் மத்தியில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக கோபம் இருந்தது. ஆனால், கோபமல்ல அச்சம். இன்று நான் பார்ப்பது என்னவென்றால், மக்கள் பாஜகவுக்கு புயலாக ஆதரவு அளிக்கிறார்கள், இது விரைவில் சுனாமியாக மாறும்.

மத்திய அரசின் பாதுகாப்பு வளையத்தி்ல் இருக்கும் என்னையே தாக்க முற்பட்டார்கள் என்றால், இங்கு வசிக்கும் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும், இங்குள்ள சட்டம் ஒழுங்கு குறித்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களான பிஎம் கிசான் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி அமல்படுத்தவில்லை. இது மம்தா அரசின் சர்வாதிகாரம், ஊழல், சட்டஒழுங்கின்மையைத்தான் பிரதிபலிக்கிறது”

இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x