வட துருவத்தின் வான்வழியாக சவால் நிறைந்த உலகின் நீண்ட பயணம்: சான் பிரான்சிஸ்கோ - பெங்களூரு விமானத்தை எங்கும் நிறுத்தாமல் பெண் விமானிகள் இயக்கம்

வட துருவத்தின் வான்வழியாக சவால் நிறைந்த உலகின் நீண்ட பயணம்: சான் பிரான்சிஸ்கோ - பெங்களூரு விமானத்தை எங்கும் நிறுத்தாமல் பெண் விமானிகள் இயக்கம்
Updated on
1 min read

சான் பிரான்சிஸ்கோ - பெங்களூரு இடையிலான ஏர் இந்தியாவின் இடை நிறுத்தம் இல்லாத விமானத்தை முழுக்க பெண் விமானிகளே இயக்கியுள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோவுக்கும், பெங்களூருக்கும் இடையிலான வான் வழி தூரம் உலகின் மிக நீளமான ஒன்றாகும். 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் ஏர் இந்தியா நிறுவனம் விமான சேவையை தொடங்க திட்டமிட்டது. அதன்படி ஏர் இந்தியாவின் ஏஐ176 விமானம் நேற்று இரவு 8.30 மணிக்கு (உள்ளூர் நேரம்) அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்டது. இது திங்கட்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு (உள்ளூர் நேரம்) கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறைஅமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனதுட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

ஏர் இந்தியா விமானத்தை முழுக்க முழுக்க பெண்களாலேயே இயக்கத் திட்டமிடப்பட்டு இந்த சேவையைத் தொடங்கி உள்ளோம். ஏர் இந்தியாவின் பெண் சக்தி, உலகம் முழுவதும் உயரமாகப் பறக்கிறது. பெங்களூரு - சான் பிரான்சிஸ்கோ இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்க விமானத்தை கேப்டன் சோயா அகர்வால், கேப்டன் பாபகரி தன்மாய், கேப்டன் அகன்ஷா சோனாவேர் மற்றும் கேப்டன் சிவானி மன்ஹாஸ் ஆகியோரைக் கொண்ட அனைத்துப் பெண்கள் குழுவினரும் இயக்கவுள்ளனர்.

இவ்வாறு ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இந்த நீண்ட தூர பாதையை பனிபடர்ந்த வட துருவத்தின் வழியாகவே கடக்க வேண்டும். மேலும் சான்பிராசிஸ்கோவில் இருந்து புறப்படும் இந்த நீண்ட விமானப் பயணம் இடையே எங்கும் நிற்காமல் பெங்களூருக்கு வந்தே தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய சவால் நிறைந்த உலகின் நீண்ட தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான திறமையும், அனுபவமும் அதோடு தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும்.

பல ஆண்டு காலமாக இது போன்ற நீண்ட தூர விமான வழித்தடத்தில் விமானம் இயக்குவதற்கு ஆண் விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானிகள் கூட்டாக இணைந்து வடதுருவத்தின் மேலான இந்த நீண்ட தூர பாதையில் பறக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in