Published : 09 Jan 2021 06:03 PM
Last Updated : 09 Jan 2021 06:03 PM

இந்திய பாரம்பரிய முறைகளை கரோனா மீட்டு தந்துள்ளது: ஜிதேந்திர சிங்

புதுடெல்லி

கைகளை சுத்தம் செய்தல், இருகரம் கூப்பி வணங்குதல் போன்ற இந்திய பாரம்பரிய முறைகளை கொரோனா நமக்கு மீட்டு தந்திருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்திற்கு நாட்டின் முதன்மை உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும், சமூக இடைவெளி, சுகாதாரம், தூய்மை, யோகா, ஆயுர்வேதம் மற்றும் இதர பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்தும் உலகளவில் பெருந்தொற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாக அவர் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தும் யோகா, ஆயுர்வேதம் போன்ற முறைகளில் முன்னெப்போதையும்விட மக்களிடையே அதிக நம்பிக்கை தற்போது ஏற்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய பொது நிர்வாக நிறுவனத்தில் “உயிரை அறியும் விஞ்ஞானம்- உடல்நலத்திற்கு தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் சத்குரு ஜக்கி வாசுதேவ்-உடன் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார். பொது முடக்கக் காலத்தில் ஏராளமான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் தனிமை, கவலையைப் போக்குவதற்காகவும் யோகா பயிற்சியை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். கோவிட் நோய் தொற்றுக்குப் பிந்தைய காலத்திலும் இதனை அவர்கள் தொடர்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடுமையான நம்பிக்கை முறைகளைப் பின்பற்றாத நாடாக இந்தியா எப்போதும் திகழ்வதாக தமது உரையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார். பலத்தால் வெற்றி பெறும் கலாச்சாரம் இந்தியாவில் எப்போதும் இல்லை என்றும் எனினும், தேடுதலுக்கான பகுதியாக இந்தியா எப்போதும் விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், நமது குடியரசு தழைப்பதற்கு நாம் இதனைத் தொடர்ந்து பேணி காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி எம் என் பண்டாரி, இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் துணைத்தலைவர் சேகர் தத், இயக்குநர் எஸ் என் திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x