

இந்தியாவில் கோவிட்-19 பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 18 கோடியைத் தாண்டியுள்ளது (18,02,53,315). கடந்த 24 மணி நேரத்தில் 9,16,951 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
1201 அரசு மற்றும் 1115 தனியார் ஆய்வகங்களை உள்ளடக்கிய 2316 பரிசோதனை ஆய்வகங்களின் வாயிலாக நாளொன்றின் பரிசோதனை திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பரிசோதனையின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதால் மொத்த பாதிப்பு 8.93 சதவீதத்திலிருந்து ஐந்து மாதங்களில் 5.79 சதவீதமாக குறைந்துள்ளது.
15 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தேசிய அளவை விட குறைந்த அளவிலான பாதிப்பு பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக பிஹாரில் 1.44 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 10 லட்சம் மக்கள் தொகையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை தற்போது 130618.3 ஆக உள்ளது. 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த எண்ணிக்கை தேசிய அளவை விட கூடுதலாக உள்ளது. எனினும் 13 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் இந்த எண்ணிக்கை தேசிய அளவை விட குறைவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,253 பேர் புதிதாக குணமடைந்துள்ளனர். தற்போது 2,24,190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பில் இது வெறும் 2.15 சதவீதமாகும்.
நாட்டில் இதுவரை மொத்தம் 1,00,56,651 பேர் (96.41%) குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுவோர் மற்றும் குணமடைந்தோர் ஆகியோருக்கான இடைவெளி தொடர்ந்து உயர்ந்து தற்போது 98,32,461 ஆக உள்ளது.
புதிதாக குணமடைந்தவர்களில் 78.89 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக கேரளாவில் 5,324 பேரும், மகாராஷ்டிராவில் 2,890 பேரும், மேற்கு வங்காளத்தில் 1,136 பேரும் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 18,222 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 79.83 சதவீத புதிய தொற்றுக்கள் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மட்டுமே பதிவாகியுள்ளது. கேரளாவில் 5,142 பேரும், அதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3,693 பேரும், கர்நாடகாவில் 970 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 228 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76.32 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 73 பேரும், கேரளாவில் 23 பேரும், மேற்கு வங்காளத்தில் 21 பேரும் உயிரிழந்துள்ளனர்.
33 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் 615 மாவட்டங்களில் 4,895 இடங்களில் மூன்றாவது முறையாக நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.