Last Updated : 09 Jan, 2021 03:41 PM

 

Published : 09 Jan 2021 03:41 PM
Last Updated : 09 Jan 2021 03:41 PM

கோவிட் 19 தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்ற தன்னார்வலர் 10 நாட்களில் உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு

மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற 42 வயது தன்னார்வலர் ஒருவர் 10 நாட்களில் உயிரிழந்துள்ளார். எனினும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இறந்தவர் உடலில் விஷம் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றும் உள்ளுறுப்பு சோதனைக்குப் பிறகு மரணத்திற்கான சரியான காரணம் அறியப்படும் என்றும் கூறப்படுகிறது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு கோவிட் -19 தடுப்பூசி கோவிஷீல்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கடந்த வாரம் நாட்டில் அவசரகால பயன்பாட்டிற்காக ஒப்புதல் அளித்தது, மேலும், இது ஒரு பெரிய தடுப்பூசி இயக்கத்திற்கு வழி வகுத்தது.

இதுகுறித்து போபாலில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்ட தனியார் மருத்துவமனையான மக்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் துணைவேந்தர் டாக்டர் ராஜேஷ் கபூர் பிடிஐயிடம் கூறியதாவது:

டிசம்பர் 12, 2020 அன்று நடைபெற்ற கோவாக்சின் தடுப்பூசி ஒத்திகையில் தீபக் மராவி பங்கேற்றார். டிசம்பர் 21 ம் தேதி மராவி இறந்த பிறகு, தடுப்பூசி ஒத்திகை நடத்திய இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் மற்றும் பாரத் பயோடெக் ஆகியோருக்கு தகவல் கொடுத்துவிட்டோம்.

தீபக் மராவி இந்த தடுப்பூசி ஒத்திகைக்கு தானாக முன்வந்து உட்படுத்தப்பட்டார். அவரை தடுப்பூசி பெறும் தன்னார்வலராக ஏற்றுக்கொள்வதற்கான அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்பட்டன, மேலும் தடுப்பூசி ஒத்திகையில் பங்கேற்க அனுமதிப்பதற்கு முன்னர் மராவியின் ஒப்புதல் எடுக்கப்பட்டது.

சோதனைக்கான திரவத்தைக் கொண்ட குப்பி குறியிடப்பட்டு வருகிறது. தடுப்பூசி ஒத்திகையில், ​​50 சதவீத மக்கள் உண்மையான ஊசி பெறுகிறார்கள், மீதமுள்ளவர்களுக்கு சலைன்வாட்டர் கொடுக்கப்படுகிறது, மராவி ஒத்திகைக்குப் பின்னர் 30 நிமிடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மேலும் நாங்கள் 7 முதல் 8 நாட்கள் அவரது உடல்நிலையை கண்காணித்தோம்.

இவ்வாறு தடுப்பூசி ஒத்திகை நடைபெற்ற மருத்துவமனையின் துணைவேந்தர் தெரிவித்தார்.

பழங்குடியினத்தவரான மராவியின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உயிரிழப்பு குறித்து கூறியதாவது:

அவர் ஒரு தினக்கூலி தொழிலாளி. ஒத்திகையின்போது டிசம்பர் 12 ம் தேதி மராவிக்கும் அவரது சகாவுக்கும் கோவாக்சின் ஊசி போடப்பட்டது. அவர் வீடு திரும்பியபோது அவர் மனக்குழப்பத்தோடு காணப்பட்டார். சில உடல்நலப் பிரச்சினைகளையும் அவர் சந்தித்தார். டிசம்பர் 17 அன்று தோள்பட்டை வலி இருப்பதாக அவர் கூறினார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவருக்கு வாயிலிருந்து நுரை வந்தது. ஓரிரு நாட்களில் தான் சரியாகிவிடுவேன் என்று கூறியவர் மருத்துவரைப் பார்க்க வேண்டாமெனக் கூறி மறுத்துவிட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்தபோதுதான் ​​அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் செல்லும் வழியிலேயே (டிசம்பர் 21 அன்று) அவர் இறந்துவிட்டார்.''

இவ்வாறு மராவியின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இப்பிரச்சினை குறித்து பேசுவதற்காக மத்திய பிரதேச சுகாதார அமைச்சர் டாக்டர் பிரபுராம் சவுத்ரியிடம் பிடிஐ தொலைபேசி மூலம் தொடர்புகொண்டது. எனினும் பிடிஐயின் அழைப்புகளுக்கு அமைச்சர் பதிலளிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x