

கேரளாவில் கடந்த ஆண்டு கரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்ட ஆயுர்வேத ரிசார்ட்டுகள், ஸ்பாக்களை மீண்டும் திறக்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றிப் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டுமென அவ்வுத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாட்டின் முதல் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட சில மாதங்களுக்குள் கேரளாவில் கோவிட்-19 பரவல் அதிகரித்தது. அதன் பின்னர் குறையத் தொடங்கி மீண்டும் அதிகரித்ததால் மத்திய அரசு உயர்மட்ட ஆய்வுக்குழுவை கேரளாவுக்கு அனுப்பிவைத்தது.
எனினும், இறப்பு விகிதம் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் மாநில அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் இயங்கிவரும் ஸ்பாக்கள் மற்றும் ஆயுர்வேத ரிசார்ட்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா வைரஸ் தீவிரமானதால் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவுக்குப் பிறகு ரிசார்ட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது.
தற்போது கரோனா பாதிப்பு ஓரளவுக்குக் குறைந்துவருவதை அடுத்து மீண்டும் ஆயுர்வேத ரிசார்ட்டுகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது:
''கரோனா வைரஸ் பாதிப்புகளால் கேரளாவில் பல மாதங்களாக மூடிக்கிடக்கும் ஸ்பாக்கள் மற்றும் ஆயுர்வேத ரிசார்ட்டுகளை மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி இத்தகைய ஸ்பாக்கள் மற்றும் ரிசார்ட்டுகள் முழுமையாகத் திறக்கப்படலாம்.
ஸ்பாக்கள் மற்றும ரிசார்ட்டுகளை நடத்துபவர்கள் கோவிட்-19 பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.