

இந்திய ஜனநாயகம் வலுவானது; துடிப்பானது எனப் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். 16வது ப்ரவஸிய பாரதிய திவஸ் நிகழ்ச்சியில் உரையாற்றியப் பிரதமர் இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது பலரும் பலவிதமாகப் பேசினர். இந்தியாவின் பொருளாதார நிலையையும், மக்களின் கல்வியறிவு நிலையையும் குறிப்பிட்டு இந்தியா நொறுங்கிவிடும் என்றனர்.
ஆனால், இந்திய வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது தேசத்தின் எதிர்காலம் பற்றிய குறைந்த மதிப்பீடுகள் அனைத்தும் பொய்யாகிவிட்டது புரியும். இந்தியா இன்று வலுவான ஜனநாயகமாக துடிப்பான ஜனநாயகமாக இருக்கிறது.
அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சியும் சந்தேகக் கண் கொண்டே கணிக்கப்பட்டது ஆனால் இன்று விண்வெளித் திட்டங்களில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவின் திறன் வெளிப்பட்டுள்ளது. தொற்று ஆரம்பித்தபோது இந்தியா பிபிஇ கிட், மாஸ்குகள், வெண்டிலேட்டர்கள், சோதனைக் கருவிகளை இறக்குமதி செய்தது. ஆனால் இப்போது நாம் இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தன்னிறைவாக இருக்கிறோம்.
இன்று இந்தியா, ஊழலை ஒழிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. நாட்டின் ஏழை மக்களுக்கான நலத்திடங்கள் நேரடியாக அவரவர் வங்கிக்கணக்குக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.
இவ்வாறு பிரதமர் பேசினார்.