குஜராத்தில் நான்கு முறை முதல்வராக இருந்த மாதவ்சிங் சோலங்கி மறைவு: மோடி, ராகுல் இரங்கல்

மாதவ்சிங் சோலங்கி | கோப்புப் படம்.
மாதவ்சிங் சோலங்கி | கோப்புப் படம்.
Updated on
1 min read

குஜராத்தில் நான்கு முறை முதல்வர் பதவி வகித்தவரும், முன்னாள் மத்திய வெளியறவுத்துறை அமைச்சருமான மாதவ்சிங் சோலங்கி காலமானார். அவருக்கு வயது 94.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோலங்கியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராவதற்கு முன்பு நான்கு முறை மாநில முதல்வராக இருந்தவர் மாதவ்சிங் சோலங்கி. இவரது மகன் பரத்சிங் சோலங்கியும் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். சோலங்கி, இன்று அதிகாலை காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''குஜராத் அரசியலில் சோலங்கி பல பத்தாண்டுகளாக முக்கியப் பங்கு வகித்தவர், சமூகத்திற்கு அவர் செய்த அளப்பரிய சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார். அவரது மறைவால் வருத்தம் அடைகிறேன். அவரது மகன் பாரத் சோலங்கியிடம் பேசி இரங்கல் தெரிவித்தேன். ஓம் சாந்தி.

அரசியலுக்கு அப்பால், ஸ்ரீ மாதவ்சிங் சோலங்கி ஜி வாசிப்பில் திளைக்கும் பழக்கம் உள்ளவர். அவர் நமது கலாச்சாரத்தின் மீது ஆர்வமாக இருந்தார்.

எப்போதும் நான் அவரைச் சந்திக்கும்போதோ அல்லது அவருடன் பேசும்போதோ, நாங்கள் புத்தகங்களைப் பற்றி விவாதிப்போம், அவர் சமீபத்தில் படித்த ஒரு புதிய புத்தகத்தைப் பற்றி அவர் என்னிடம் கூறுவார். எங்களுடைய தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன்.''

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது இரங்கல் செய்தியில் கூறுகையில், ''காங்கிரஸ் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதற்கும் சமூக நீதியை மேம்படுத்துவதற்கும் சோலங்கி ஆற்றிய பங்களிப்புக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். ஸ்ரீ மாதவ்சிங் சோலங்கியின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.''

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in