

மகாராஷ்டிரா தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தீ விபத்து குறித்து விரிவான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டிருக்கிறார்.
முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. 7 குழந்தைகள் மீட்கப்பட்டன.
இச்சம்பவத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் உறுதிசெய்யப்படாத நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கூடவே, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளது. மேலும் இன்று மாலை 5 மணியளவில் சம்பவ இடத்துக்குச் செல்கிறார் மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே.