கேரள தங்கக் கடத்தலில் சர்ச்சையில் சிக்கிய சபாநாயகர்: பாஜக, காங்கிரஸ் போராட்டத்தால் இடதுசாரி அரசுக்கு கடும் நெருக்கடி

கேரள தங்கக் கடத்தலில் சர்ச்சையில் சிக்கிய சபாநாயகர்: பாஜக, காங்கிரஸ் போராட்டத்தால் இடதுசாரி அரசுக்கு கடும் நெருக்கடி
Updated on
2 min read

தங்கக் கடத்தல் வழக்கில் கேரள சபாநாயகரின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் குற்றச்சாட்டுகள் இடதுசாரி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன.

கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விசாரணையில் கேரள அரசியல் முக்கிய புள்ளி ஒருவர், கேரளாவில் இருந்து டாலர்களை வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி கொண்டு சென்றதாக வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். அந்த முக்கிய புள்ளி சபாநாயகர் ராமகிருஷ்ணன்தான் என்று கேரளபாஜக தலைவர் சுரேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இதையடுத்து ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தவே, இருமுனைத் தாக்குதலால் கடும் நெருக்கடியில் சிக்கியது மார்க்சிஸ்ட் கட்சி.

இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘எனது உறவினர்களும், என் தொகுதிக்கு உட்பட்ட பலரும் வளைகுடா நாட்டில் இருக்கின்றனர். அவர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள செல்வேன். அதனால்தான் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்கு சென்றேன்’’ என்று விளக்கம் கொடுத்தார். எனினும், திருப்தி அடையாத பாஜக, காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகர் என்பதால் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படாமல் அடிக்கடி போய் வந்திருக்கிறார். இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது என்று குற்றம் சாட்டினர்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுங்க இலாகா அதிகாரிகள் முன்பு ஆஜராக சொல்லி சபாநாயகரின் உடன் பயணிக்கும் முக்கிய அலுவலருக்கு இரு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தது தெரியவர அரசியல் கட்சிகளின் போராட்டமும் சூடு பிடித்தது.

இந்தச் சூழ்நிலையில், கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று கூடியது. கூட்டம் தொடங் கிய சிறிது நேரத்திலேயே சபாநாயகர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் கூச்சல் எழுப்பினர். ஆளுநர் ஆரிப் முகமது கானின் உரையின் போதே பதாகைகளுடன் வந்திருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள், முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும், சபாநாயகர் ராமகிருஷ்ணனுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். ‘இது ஊழல் மிகுந்த அரசாங்கம்’ என்று எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூச்சல் போட்டார். அதன்பின், வெளிநடப்பு செய்தகாங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவை நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் சபாநாய கரின் கூடுதல் தனி செயலாளர் அய்யப்பன், சுங்க இலாகா அதிகாரிகள் முன்பு ஆஜரானதாக கூறப்படுகிறது. சபாநாயகரின் அன்றாட நிகழ்ச்சிகள், பயண விவரங்களை திட்டமிடும் பொறுப்பில் இருக்கும் அய்யப்பனை, டாலர் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக குறுக்கு விசாரணை செய் யவே சுங்க அதிகாரிகள் அழைத்ததாக தகவல் வெளியானது.

இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத விவகாரத்தை முன் வைத்து, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏ உமர், சபாநாயகர் மீதுநம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். அவரது மனு கூட்டத்தொடரின் விவாதத்துக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த எம்.சிவசங்கரன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது முதலே இடதுசாரி அரசுக்கு தங்கக் கடத்தல் வழக்கு பெரும் தலைவலியாக மாறியது.அதிகாரி மட்டத்தில் இருந்த இவ்விவகாரம், சபாநாயகர் மீதான குற்றச்சாட்டால் அரசியல் கட்சி மட்டத்துக்கு நகர்ந்துள்ளது.

சபாநாயகர் உருக்கம்

சபாநாயகர் ராமகிருஷ்ணன் கூறும்போது, ‘‘தனக்கு கீழ் பணி செய்யும் ஒருவரை விசாரணைக்கு அழைக்க சில விதிமுறைகள் உள்ளன, சபாநாயகரிடம் அதற்கு அனுமதி கேட்க வேண்டும். என்னிடம் அனுமதியின்றி சட்டப்பேரவை எல் லைக்குள் சிவில் அல்லது கிரிமினல் என எந்த சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனினும் எந்த விசாரணையும் தடுக்கப்படாது. தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்பு உடையவர்களோடு நான் விமானத்தில் செல்லவோ அல்லது அவர்களை சந்தித்ததோ கூட இல்லை. நான் கடு களவு ஆதாயம் பெற்றதாக நிரூபித்தால் கூட பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்’’என்று கூறினார்.

முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய குற்றவாளி சந்தீப் நாயரின் கடையை சபாநாயகர் ராமகிருஷ்ணன் திறந்து வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

ஸ்வப்னா மனு சர்ச்சை

தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் சில நாட்களுக்கு முன்பு திருவனந் தபுரத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘‘இந்த வழக்கோடு தொடர்புடைய விஜபி.யின் பெயரை சொன்னால் என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். சிறையில் 4 பேர் என்னை சந் தித்து மிரட்டினார்கள்’’ என்று தெரிவித்துள்ளார். இதனால் சிறையில் அவருக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப் பட்டது.

அதேநேரம், ஸ்வப்னாவை அவரது குடும்பத்தினர் தவிர யாரும் சந்திக்கவில்லை என சிறை துறையும் தெரிவித்தது. ஆனால் ஸ்வப்னா சொன்ன அந்த விஜபி யார் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வியால், கேரள இடதுசாரி அரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பாஜக ஆர்ப்பாட்டம்

கேரள சபாநாயகர் ராஜினாமா செய்ய கோரி பாஜக இளைஞரணி சார்பில் கேரள சட்டப்பேரவை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையில் பதாகைகளுடன் சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்றதால் போலீஸார் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர். பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இரு வேறு சிந்தாந்தங்களைக் கொண்டதாக இருந்தாலும் மார்க்சிஸ்ட் அரசை எதிர்ப்பதில் ஒரே கொள்கையோடு இருக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in