கரோனா பாதிப்பு ஜனவரியில் 5-வது முறையாக 19 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது: 234 பேர் உயிரிழப்பு

படம் | ஏஎன்ஐ
படம் | ஏஎன்ஐ
Updated on
1 min read


இந்தியாவில் நாள்தோறும் புதிதாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் 5-வது முறையாக 19 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகதாராத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18 ஆயிரத்து 139 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 4 லட்சத்து 13 ஆயிரத்து 417 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை ஒரு கோடியே 37 ஆயிரத்து 398 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 96.39 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பால் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 449 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2.16 சதவீதமாகக் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18-வது நாளாக 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கரோனா வைரஸால் நேற்று மட்டும் 234 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 570 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 72 பேர், மேற்கு வங்கத்தில் 18 பேர், கேரளாவில் 25 பேர், டெல்லியில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 17 கோடியே 93 லட்சத்து 36 ஆயிரத்து 364 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 9 லட்சத்து 35 ஆயிரத்து 369 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது.

செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தையும், நவம்பர் 20-ம் தேதி 90 லட்சத்தையும் , டிசம்பர் 19-ம் தேதி ஒரு கோடியையும் கடந்துள்ளது''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in