Published : 08 Jan 2021 09:26 AM
Last Updated : 08 Jan 2021 09:26 AM

16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு: பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

கோப்புப் படம்

புதுடெல்லி

16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு 2021 ஜனவரி 9 அன்று நடத்தப்படுகிறது.

வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்தின் முன்னணி நிகழ்ச்சியான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு, அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுடன் இணைப்பை ஏற்படுத்தும், அவர்களை ஈடுபடுத்தும் முக்கிய தளமாக விளங்குகிறது.

இதர நாடுகளில் இருக்கும் நம்முடைய துடிப்பான சமூகத்தின் எண்ணங்களை கருத்தில் கொண்டு, தற்போதைய கோவிட் பெருந்தொற்றுக்கு இடையிலும், 16-வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு 2021 ஜனவரி 9 அன்று நடத்தப்படுகிறது.

மாநாட்டுக்கு முன் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டங்களைப் போலவே, மெய்நிகர் முறையில் மாநாடும் நடத்தப்படும். “தற்சார்பு இந்தியாவுக்கு பங்காற்றுதல்” என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் மையக்கருவாக இருக்கும்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு மூன்று பிரிவுகளை கொண்டிருக்கும். பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட இருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில், சுரிநாம் அதிபர் சந்திரிகாபெர்சாத் சந்தோக்கியின் சிறப்புரை இடம்பெறும். இளைஞர்களுக்கான ‘பாரத் கோ ஜானியே’ விநாடி வினா நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

தொடக்க நிகழ்வுக்கு பிறகு நிகழ இருக்கும் இரண்டு அமர்வுகளில் மத்திய அமைச்சர்கள் உரையாற்றுவார்கள். நிறைவு நிகழ்ச்சியில் மாண்புமிகு குடியரசுத் தலைவர் நிறைவுரையாற்றுவார். ‘பிரவசி பாரதிய சம்மான் விருதுகள் 2020-21’-இன் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பல்வேறு துறைகளில் திறம்பட பங்காற்றி வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களை கவுரவப்படுத்த இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

2021 ஜனவரி 8 அன்று இளைஞர்களுக்கான வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு “இந்தியா மற்றும் வெளிநாட்டு இந்தியர்களில் இருந்து இளம் சாதனையாளர்களை ஒன்றிணைத்தல்” என்னும் தலைப்பில் மெய்நிகர் முறையில் நடைபெறும்.

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் இதை தொகுத்து வழங்குவார். நியுசிலாந்து நாட்டின் சமூக மற்றும் தன்னார்வ துறை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x