

பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய கீதா, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
சைகை மொழிப்பெயர்ப்பாளரின் உதவியுடன் சுமார் 20 நிமிடங்கள் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கீதாவுடன் பேசினார்.
அப்போது, இந்தியாவில் கீதா தனது வாழ்க்கையை தொடர அனைத்து விதமான உதவிகளை செய்து தர தயாராக உள்ளதாக கேஜ்ரிவால் உறுதியளித்தார்.
கீதாவுடன் பாகிஸ்தான் எதி அறக்கட்டளையைச் சேர்ந்த 5 பேரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.
காது கேளாத, வாய் பேச இயலாத கீதா கீதா 8 வயதாக இருக்கும்போது, தவறுதலாக பாகிஸ்தானுக்குள் சென்று, லாகூர் ரயில் நிலையத்தில் சம்ஜவுதா எக்ஸ்பிரஸில் தனியாக அமர்ந்திருந்தார். அவரை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர், காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் எதி அறக்கட்டளை அவரை பாதுகாத்து வளர்த்தது.
இருநாடுகளின் வெளியுறவு அமைச்சகங்களின் முயற்சியால் கீதாவின் பெற்றோர் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் தற்போது பிஹாரில் உள்ள நிலையில் தற்போது 23 வயதாகும் கீதா திங்கள்கிழமை இந்தியா அழைத்து வரப்பட்டார்.
பிஹாரில் உள்ளவர்கள் கீதாவும் பெற்றோர்கள் என அடையாளம் காணப் பட்டிருந்தாலும், மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை மூலம் உறுதி செய்தபிறகே அவர்களிடம் கீதா முறையாக ஒப்படைக்கப்படுவார்.
சோதனை முடிவு வர 15 நாட்கள் ஆகும் என்ற நிலையில் கீதா அதுவரை இந்தூரில் தங்க வைக்கப்படுவார் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இந்தியா திரும்பிய கீதா இதுவரை பிரதமர் நரேந்திர மோடி, வெளியிறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை ஏற்கெனவே சந்தித்து பேசினார்.