

கடந்த ஆறரை ஆண்டுகளில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தியதன் மூலம் ரூ.19 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன. இதன்படி இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 26 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், இதுவரையில்லாத வகையில் மும்பையில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90.83 ஆகவும், டீசல் விலை ரூ.81.07 ஆகவும் அதிகரித்துள்ளது. லாக்டவுன் காலத்தில் கச்சா எண்ணெய் விலை மோசமாக வீழ்ச்சி அடைந்த நேரத்தில், அதன் பலனை மக்களுக்கு வழங்காமல் பெட்ரோலில் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலில் 15 ரூபாயும் கடந்த மார்ச், மே மாதங்களில் மத்திய அரசு உயர்த்தியது.
இதன் மூலம் கூடுதலாக ரூ.1.60 லட்சம் கோடி வருவாய் ஈட்டியது. கடந்த மே மாதத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.14.54, டீசல் விலை லிட்டருக்கு ரூ.12.09 உயர்ந்துள்ளது.
இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மத்திய அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
''மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு, கரோனாவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பையும், நாட்டில் நிலவும் பேரிடரான சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தியும், தனது கஜானாவை நிரப்பிக்கொள்ள நினைக்கிறது.
நாடு சுதந்திரமடைந்ததில் இருந்து முதல் முறையாக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருபுறம் தேசத்துக்கு உணவு வழங்கும் விவசாயிகள் நியாயமான தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 44 நாட்களாக டெல்லியின் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அதே நேரத்தில் சர்வாதிகாரப் போக்கு கொண்ட, உணர்வற்ற, இரக்கமற்ற பாஜக அரசு, ஏழை மக்களின், நடுத்தர மக்களின் முதுகெலும்பை உடைப்பதில் பரபரப்பாக இருக்கிறது.
கடந்த ஆறரை ஆண்டுகளில் மோடி அரசு பெட்ரோல், டீசலில் உற்பத்தி வரியை உயர்த்தியன் மூலம் ரூ.19 லட்சம் கோடி ஈட்டியுள்ளது. இன்று பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை பேரல் 50.96 டாலராகத்தான் இருக்கிறது. அதாவது லிட்டர் ரூ.23.43. இவ்வளவு குறைந்தபோதிலும்கூட, டீசல் விலை ரூ.74.38 ஆகவும், பெட்ரோல் விலை ரூ.84.20 ஆகவும் உயர்ந்துள்ளது.
கடந்த 73 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இதுதான் அதிகபட்சமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், மக்களுக்கு நன்மை கிடைப்பதற்குப் பதிலாக உற்பத்தி வரியை உயர்த்தி லாபம் ஈட்டுவதிலேயே மத்திய அரசு நோக்கமாக இருக்கிறது. சமையல் காஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது ஒவ்வொரு வீட்டின் பட்ஜெட்டையும் பாதிக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதைப் போல், டீசல், பெட்ரோல் மீதான கலால் வரி இருக்க வேண்டும். விவசாயிகள் போராட்டத்துக்குச் செவி சாய்த்து, வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்''.
இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.