

உத்தரப் பிரதேசத்தில் கோயிலுக்கு வந்த 42 வயதுப் பெண்ணை தனது 2 சகாக்களுடன் சேர்ந்து ஒரு சாது, கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்ததாகப் புகார் எழுந்த நிலையில், தலைமறைவான சாது பற்றித் துப்பு அளிப்போருக்கு ரூ.50,000 பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள பதாயூ நகரின் மேவ்லி கிராமத்தில் பழமையான சிவன் கோயில் உள்ளது. இங்கு மனநலம் பாதிக்கப்பட்ட தன் கணவருக்காக வேண்டிக்கொள்ள 42 வயதுப் பெண் கடந்த ஞாயிறு மாலை 4 மணிக்கு வந்துள்ளார். இவர் மாலை 7 மணி வரை வீடு திரும்பாததால் மகன், தாயின் கைப்பேசிக்கு அழைத்தபோது அது அணைக்கப்பட்டிருந்தது.
பிறகு இரவு 11 மணிக்கு அப்பெண்ணின் வீட்டிற்குக் கோயிலில் பூசாரியாகப் பணியாற்றும் சாது சத்யநாராயணா என்பவரின் சகாக்களான வேத்ராம் மற்றும் ஜஸ்பால் வந்தனர்.
கோயிலுக்கு வந்த பெண், அருகிலிருந்த நீர் வற்றிய கிணற்றில் விழுந்து காயமானதால், சாதுவின் நான்கு சக்கர வாகனத்தில் அருகிலுள்ள சண்டவுஸியின் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறினர். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த மகன், தன் தாயின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.
உடனடியாகத் தன் உறவினர்களையும் அழைத்துக் காண்பிப்பதற்குள் அவரது உயிர் பிரிந்தது. இதனால் அப்பெண்ணின் குடும்பத்தினர் உகைட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இப்புகாரை ஆய்வாளர் ராகவேந்திரா சிங் பதிவு செய்ய மறுத்துள்ளார். எனவே, மறுநாள் பதாயுவின் கிராமப்புறக் காவல்துறை எஸ்.பி.யான சித்தார்த் வர்மாவிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில், அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தப் புகாரைப் பதிவு செய்ய மறுத்த ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தாம் கைது செய்யப்பட்டு விடுவோம் என அஞ்சி சாது சத்யநாராயணா உள்ளிட்ட மூவரும் தப்ப முயன்றனர். எனினும், சகாக்கள் இருவரும் கைது செய்யப்பட்டுவிட, சாது மட்டும் தலைமறைவாகி விட்டார்.
சம்பவ இடத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில், அப்பெண்ணின் ரத்தக்கறை படிந்த சேலை கோயிலுக்கு அருகில் கிடந்துள்ளது. சாது சத்யநாராயணாவின் ஆசிரம அறையின் கட்டிலிலும் ரத்தக் கறைகள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்லியில் நிர்பயா 2013-ல் பாதிக்கப்பட்டதுபோல், உ.பி. பெண்ணின் உடலில் பல்வேறு பாகங்களில் இரும்புக் கம்பியைப் பயன்படுத்தி கொடூரமான காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். இது உடற்கூறு ஆய்வில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவின் பேரில் உ.பி. மாநில அதிரடிப் படையின் சிறப்புக் குழுவிடம் இவ்வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில், சாது சத்யநாராயணா பற்றித் துப்பு அளிப்போருக்கு ரூ.50,000 பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் யோகி அரசு அறிவித்துள்ளது.
சுமார் ஏழு வருடங்களுக்கு முன் பதாயுவின் கிராமத்திற்குச் சாது சத்யநாராயணா வந்துள்ளார். அங்கு பாழடைந்து இருந்த சிவன் கோயிலைப் புனரமைத்தவர், அதன் அருகில் தனது ஆசிரமத்தை அமைத்து, கோயிலின் பூசாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்துத் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் சந்திரமுகி தேவி, இன்று மேவ்லி கிராமம் வந்திருந்தார். அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியவர், சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.