ராஜஸ்தான் கிராமத்திலிருந்து கடத்தப்பட்ட 38 பெண்கள், குழந்தைகள் மீட்பு

மீட்கப்பட்ட 38 பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகள் | படம்: ஏஎன்ஐ
மீட்கப்பட்ட 38 பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் ராஜஸ்தான் காவல்துறை அதிகாரிகள் | படம்: ஏஎன்ஐ
Updated on
1 min read

ராஜஸ்தான் கிராமத்திலிருந்து கடத்தப்பட்ட 38 பெண்கள், குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக அம்மாநில போலீஸார் தெரிவித்தனர்.

ஜல்வாரில் உள்ள அன்ஹெர் காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்த பாமன் தேவரியன் கிராமத்தில் நடந்துள்ள பரபரப்பான சம்பவம் குறித்து காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கிரண் காங் சிந்து ஊடகங்களிடம் கூறியதாவது:

"ராஜஸ்தானின் ஜல்வாரில் உள்ள அன்ஹெர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட பாமன் தேவரியன் கிராமத்திற்கு சுமார் 100 பேர் வந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவர்கள் மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் மாவட்டத்தின் அலோட் காவல் நிலையப் பகுதியிலிருந்து பஸ் மற்றும் பிற வாகனங்களில் வந்தனர். அவர்களிடம் கத்திகள், வாள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

பாமன் தேவரியன் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவர்கள் கடத்திச் சென்றனர். இதற்கென்று பிரத்யேகமாக அனுப்பப்பட்ட காவல்துறை படை விரைந்து மத்தியப் பிரதேசத்தின் அலோட் பகுதிக்கு விரைந்தனர். குற்றவாளிகள் அடைத்து வைத்திருந்த ராஜஸ்தானைச் சேர்ந்த 38 பெண்கள் மற்றும் குழந்தைகளை காவல் துறையினர் மீட்டனர்.

மேலும் 6 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெண்களையும் குழந்தைகளையும் கடத்திச் சென்றதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் இந்திய தண்டனைச் சட்டம் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதுடன், தப்பி ஓடிய மேலும் பல குற்றவாளிகளைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன''.

இவ்வாறு காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in