Published : 07 Jan 2021 11:13 AM
Last Updated : 07 Jan 2021 11:13 AM

5-வது வரைவு தேசிய அறிவியல்- தொழில்நுட்ப புத்தாக்கக் கொள்கை: மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

அனைவருக்கும் சம அளவிலான நன்மைகளை அளிக்கக் கூடிய முழுமையான அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புதுமைகளுக்கான சூழலியலை உருவாக்குவதே ஐந்தாவது வரைவு தேசிய அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கக் கொள்கையின் லட்சியம், என்று அறிவியல் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறினார்.

புதுடெல்லியில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், “காலங்கள் வேகமாக மாறி வருகின்றன. மாற்றத்தின் வேகத்தோடு ஈடுகொடுப்பதற்கு இந்தக் கொள்கை நம்மை தயார்படுத்தும். புதிய சிக்கல்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைக் கொண்டே தீர்வு காண முடியும். எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதில் இந்தக் கொள்கை சரியான திசையில் செல்கிறது,” என்றார்.

பொருளாதார வளர்ச்சி, சமூக ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றை உள்ளடக்கி நீடித்த வளர்ச்சிக்கான பாதையில் இந்தியா வெற்றி நடை போட்டு, தற்சார்பு இந்தியா லட்சியத்தை எட்டுவதை கருத்தில் கொண்டு இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என்று பேராசிரியர் சர்மா கூறினார். பாரம்பரிய அறிவுசார் அமைப்புகளை ஊக்கப்படுத்துதல், உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்குதல், அடித்தள புதுமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

ஐந்தாவது வரைவு தேசிய அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கக் கொள்கை மீதான பொதுமக்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. தொழில்நுட்ப தற்சார்பை அடைவதையும், வரும் தசாப்தங்களில் உலகின் முதல் மூன்று வல்லரசுகளில் ஒன்றாக இந்தியாவை நிலைநிறுத்துவதயும், மக்கள் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புதுமை சூழலியலின் மூலம் அத்தியாவசிய மனித மூலதனத்தை ஈர்த்து, வளர்த்து, வலுப்படுத்தி, தக்கவைத்துக் கொள்வதையும் இந்தக் கொள்கை லட்சியமாகக் கொண்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் ஐந்தாவது வரைவு தேசிய அறிவியல், தொழில்நுட்ப , புத்தாக்கக் கொள்கை பதிவேற்றப்பட்டுள்ளது.

https://dst.gov.in/draft-5th-national-science-technology-and-innovation-policy-public-consultation என்னும் இணைப்பில் அதைக் காணலாம்.

இக்கொள்கை குறித்த தங்கள் ஆலோசனைகள், கருத்துகள், உள்ளீடுகளை 2021 ஜனவரி 25-க்குள் india.stip@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்பலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x