

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் வந்தனா. இவருக்கு பிறந்தது முதலே காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ளது. எனினும், கலை பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பல கலைகளை கற்று வருகிறார்.
இவர் பிரதமர் மோடியின் உருவத்தை ரங்கோலி படமாக உருவாக்கி தீபாவளி பரிசாக அனுப்பி வைத்திருந்தார். அதைப் பார்த்த மோடி, வந்தனாவைப் பாராட்டி பதில் கடிதம் அனுப்பி உள்ளார். பிரதமர் பதில் அளிப்பார் என்று சற்றும் எதிர்பார்க்காத வந்தனா, மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
வந்தனாவை உற்சாகப்படுத்தி பிரதமர் மோடி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘வாழ்க்கையில் தடைகள் மற்றும் சவால்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் மனதை தளரவிடாமல் நாம் எதிர்த்து போராடினால், அதுதான் நமது உண்மையான வெற்றி. வந்தனாவுக்கு சிறந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். அத்துடன், கலை மற்றும் கல்வித்துறையில் மேலும் பல உயரங்களை வந்தனா பெற வாழ்த்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
வந்தனாவின் கைவண்ணத்தைப் பார்த்து, பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.