Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

கேரளாவில் மீட்புக் குழுவினருடன் அரபிக் கடலுக்குள் சென்று ட்ரோன் மூலம் 4 மீனவர்களை காப்பாற்றிய இளைஞர்

அரபிக் கடலில் சிக்கித் தவித்த 4 மீனவர்களை ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் கண்டுபிடித்து இளைஞர் ஒருவர் காப்பாற்றி உள்ளார்.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நட்டிகா கடற்கரையில் இருந்து அரபிக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகு கரைக்குத் திரும்பவில்லை. அதிலிருந்த 4 மீனவர்களின் கதியும் என்னவென்று தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்க 19 வயதான இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தேவங் சுபில் முன்வந்தார். தன்னுடைய ஆளில்லாத விமானம் (ட்ரோன்) மூலம் அவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என்று அறிவித்தார். ஆனால், மீட்புக் குழுவினர், ‘இது விளையாட்டல்ல’ என்று முதலில் மறுத்துவிட்டனர்.

ஆனால், இவருடைய ஆர்வத்தை கேள்விப்பட்ட நட்டிகா தொகுதி எம்எல்ஏ கீதா கோபி, தேவங் சுபிலைத் தொடர்பு கொண்டு அவர் கடலுக்குள் செல்வதற்கு ஏற்பாடு செய்தார். அதன்படி, மீட்புக் குழுவினர் மற்றும் மீனவர்களுடன் கடலுக்குள் படகில் சென்ற தேவங் சுபில், சில மணி நேரங்களில் தனது ட்ரோனில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் கடலில் தவித்த 4 மீனவர்களையும் ஒவ்வொருவராக கண்டுபிடித்தார். கேமரா காட்சிகளைப் பார்த்தவுடன் அந்தப் பகுதிகளில் விரைந்து சென்று மீனவர்களை மீட்புக் குழுவினர் மீட்டனர்.

ட்ரோன் கேமரா மூலம் மீனவர்களைக் காப்பாற்ற முடியும் என்று நிரூபித்துக் காட்டிய தேவங் சுபில் ஒரே நாளில் கேரளாவில் ஹீரோவாகிவிட்டார். கேரள மக்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து தேவங் சுபில் கூறும்போது, “இதுதான் எனது முதல் கடல் பயணம். மீனவர்களைத் தேடி நாங்கள் கடற்கரையில் இருந்து 11 நாட்டிக்கல் மைல் தூரத்துக்குச் சென்றோம். அப்போது ட்ரோனை பறக்க விட்டு மீனவர்கள் தென்படுகிறார்களா என்று கேமரா மூலம் கண்காணித்தோம். முதலில் ஒரு மீனவர் கடலில் சிக்கித் தவிப்பது கேமராவில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து மற்ற மீனவர்களும் கேமராவின் கண்ணில் அகப்பட்டனர். அவர்களில் 4-வது மீனவர் மட்டும் சாவின் விளிம்பில் இருந்தார். ஆனால் அவரையும் கடவுளின் அருளால் காப்பாற்றிவிட்டோம்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தேவங் சுபில் தற்போது பெங்களூருவில் உள்ள கிறிஸ்து பல்கலைக்கழகத்தில் பி.டெக் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x