

‘‘இஸ்ரோ அலுவலகத்திலே எனக்கு தோசையில் விஷம் வைக்கப்பட்டது’’ என்று மூத்த விஞ்ஞானி தபன் மிஸ்ரா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மூத்த விஞ்ஞானி தபன் மிஸ்ரா, அகமதாபாத் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் முன்னாள் இயக்குநராக பணியாற்றியவர். செயற்கைக் கோளில் பொருத்தும் நுண்ணலை ரேடார் தயாரிப்பதில் சர்வதேச அளவில் அறியப்பட்டவர். இம்மாத இறுதியுடன் ஓய்வு பெற இருக்கும் தபன் மிஸ்ரா, நேற்று தனது பேஸ்புக்கில் ‘நீண்ட காலமாக வெளியிடப்படாத ரகசியம்' என்ற நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தபன் மிஸ்ரா கூறியிருப்பதாவது:
கடந்த 1971-ம் ஆண்டு இஸ்ரோவின் முன்னோடி பேராசிரியர் விக்ரம் சாராபாயின் சந்தேக மரணம், 1999-ல் வி.எஸ்.எஸ்.சி. இயக்குநர் எஸ்.னிவாசனின் திடீர் மரணம், கடந்த 1994-ல் நம்பிநாராயணன் மீதான வழக்கு ஆகியவை நமக்கு நன்றாக தெரியும். ஆனால், இதுபோன்ற மர்மமான விஷயத்தில் நானும் சிக்குவேன் என்று ஒரு நாளும் எதிர்பார்த்ததில்லை.
கடந்த 2017-ம் ஆண்டு மே 23-ம்தேதி பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் பதவி உயர்வு நேர்காணலில் நிபுணராக சென்றிருந்தேன். அங்கு மதிய உணவுக்கு பிறகான சிற்றுண்டி நேரத்தில், எனக்கு பெரிய தோசைமற்றும் சட்னி பரிமாறினர். அந்த உணவில் எனக்கு விஷத்தன்மை வாய்ந்த ஆர்சனிக் ட்ராக்ஸைட் எனும் வேதிப்பொருள் (விஷம்) கலக்கப்பட்டுள்ளது.
2 ஆண்டு போராட்டம்
இதனால், 2 ஆண்டுகள் மிக மோசமானரத்தப்போக்கு ஏற்பட்டது. என் உடலில் இருந்து 30 முதல் 40 சதவீதம் வரை ரத்தத்தை இழந்தேன். இரண்டு ஆண்டாக அகமதாபாத்தில் உள்ள சைடஸ் காடிலா, மும்பை டிஎம்ஹெச், டெல்லி எய்ம்ஸ் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தேன். அந்த கால கட்டத்தில் கடுமையான சுவாச பிரச்சினை, அசாதாரண தோல் வெடிப்பு, தோல் உதிர்தல், நகங்கள் உதிர்தல், மோசமான நரம்பியல் பிரச்சினை, எலும்பு வலி, திடீர் மாரடைப்பு உள்ளிட்டவை ஏற்பட்டன.
கடந்த 2017 ஜூன் 5-ம் தேதி என்னோடு பணியாற்றிய இயக்குநர்களில் ஒருவர், 'எனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது' என்று என்னை எச்சரித்தார். அநேகமாக அவர் என் உணவில் விஷம்கலந்ததை பார்த்திருக்கலாம் என நினைக்கிறேன். அதே ஆண்டு ஜூன் 7-ம் தேதி எம்ஹெச்ஏ பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் என்னை சந்தித்து ஆர்சனிக் வேதிப்பொருள் பாதிப்பு குறித்து என்னை எச்சரித்தனர். இந்த தகவல்களை நான் மருத்துவர்களுக்கு தெரிவித்ததால், அவர்களால் சரியான சிகிச்சை அளிக்க முடிந்தது.
இந்த கால கட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகளின் தலையீடும், உதவியும் இல்லாமல் போயிருந்தால் நான் இறந்திருப்பேன். இந்த ஆர்சனிக் வேதிப்பொருள் விஷம் என்பது நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற ஒரு கலவை. அதனை யாராலும் எளிதில் சந்தேகிக்க முடியாது. இதை உணவில் கலந்தால் சாப்பிட்டதும் உடனடியாக ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு 3 மணி நேரத்துக்குள் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும். அவ்வாறு இறப்போரை மாரடைப்பால் இறந்து விட்டார் என்று எல்லோரும் எளிதில் நம்புவார்கள்.
எனக்கு இந்த விஷம் கொடுத்ததன் பிண்ணனியில் நுண்ணலை ரேடார் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற மிகப் பெரிய ராணுவ மற்றும் வணிக முக்கியத்துவம் கொண்ட ஒரு விஞ்ஞானியை கொல்வதற்கான உளவுத் தாக்குல் இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னை அழிக்கவும், இஸ்ரோவின் வளர்ச்சியை தடுக்கவும் கூட இதை செய்திருக்கலாம்.
நீதிக்காக கெஞ்சினேன்
நீதியைப் பெற உதவுமாறு இஸ்ரோ தலைவர்களாக இருந்த கிரண் குமார், கஸ்தூரி ரங்கன், மாதவன் நாயர் ஆகியோரிம் கெஞ்சினேன். கிரண்குமார் எனக்கு முன்பிருந்த புற்றுநோய் மீண்டும் வந்துவிட்டது என என்னையே நம்ப வைக்க முயற்சித்தார். என் வாயைஅடைக்க பல முனைகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான அச்சுறுத்தல் மின்னஞ்சல்கள் வந்தன. பல குண்டுவெடிப்புசம்பவங்களில் இருந்து பாதுகாப்பு அதிகாரிகள் என்னை மீட்டனர்.
கடந்த 2019 ஜூலை 19-ம் தேதி அமெரிக்காவின் உயர்மட்ட பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்க பேராசிரியர் ஒருவர் என்னை சந்தித்து, ‘‘உனக்கு ஏற்பட்டதை பற்றி எதிர்காலத்தில் ஒரு வார்த்தை கூட பேச கூடாது. அவ்வாறு செய்தால் உன் மகனை அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சேர்த்து விடுகிறேன்'' என கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவர் என் அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். அடுத்த சில மணி நேரத்தில் என் 30 ஆண்டுகளுக்கும் மேலான விஞ்ஞான வாழ்க்கை தலைகீழாக மாறியது. என் இயக்குநர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டேன். எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் நீக்கப்பட்டது.
யாரோ ஒருவர் இஸ்ரோவுக்கு தீங்கு செய்ய முயற்சித்துள்ளார். அதற்கு காரணமான குற்றவாளியைப் பிடித்து தண்டிப்பதே தீர்வாகும். இதன் பின்னணி குறித்து எனக்குத் தெரியவில்லை. எதிர்காலத்தில் மற்ற விஞ்ஞானிகளை இத்தகைய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதற்காக இதை பொதுத் தளத்தில் பதிவு செய்துள்ளேன். நிச்சயமாக இது ஒரு சாதாரண குண்டரின் வேலை அல்ல; இஸ்ரோவில் நுழைந்துள்ள அதிநவீன வெளிநாட்டு உளவு நிறுவனத்தின் வேலை.
இவ்வாறு விஞ்ஞானி தபன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.