சகிப்புத் தன்மையும், எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளுதலும் அழிந்து வருகிறதோ?- பிரணாப் முகர்ஜி ஐயம்

சகிப்புத் தன்மையும், எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளுதலும் அழிந்து வருகிறதோ?- பிரணாப் முகர்ஜி ஐயம்
Updated on
1 min read

நாட்டில் சகிப்புத் தன்மையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளும் தன்மையும் அழிந்து வருகிறதோ என்று ஐயம் எழுப்பியுள்ளார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.

சமீப காலங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள், உதாரணமாக, பாகிஸ்தானி கஜல் பாடகர் குலாம் அலியின் கச்சேரிக்கு சிவசேனா விடுக்கும் அச்சுறுத்தல், இன்று பிசிசிஐ-பிசிபி இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தைகள் சிவசேனா அச்சுறுத்தலினால் ரத்து செய்யப்பட்டது, இன்னும் பலதரப்பிலிருந்தும் மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் ஆகிய பின்னணியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த ஐயத்தை எழுப்பியுள்ளார்.

பிர்பூமில் நயபிரஜன்மா என்ற உள்ளூர் வாராந்திர செய்தித்தாள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பிரணாப் முகர்ஜி, "எந்தச்சூழ்நிலையிலும் மனித நேயமும், மனித மாண்புகளும் பன்மைத்துவமும் கைவிடப்படக் கூடாது. மாற்றுக் கருத்துகளையும், விமர்சனங்களையும் உட்கிரகித்து தன்மயமாக்குவதே இந்திய சமூகத்தின் முக்கிய பண்பாகும். சமூகத்தின் தீய சக்திகளை தடுக்கவே நமது கூட்டு பலம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

சகிப்புத் தன்மையும், எதிர்ப்பையும் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை அழிந்து வருகிறதோ?

இந்திய நாகரீகம் 5,000 ஆண்டுகள் நீடித்துள்ளது என்றால் அதன் சகிப்புத் தன்மைதான் அதற்குக் காரணம். எப்போதும் இணங்காத் தன்மையையும், எதிர்ப்பையும், வித்தியாசத்தையும் இந்திய நாகரீகம் ஏற்றுக் கொண்டே வந்துள்ளது. பெரிய எண்ணிக்கையில் மொழிகள், 1,600 வட்டார வழக்குகள், 7 மதங்கள் இந்தியாவில் ஒருங்கிணைந்துள்ளன. அனைத்து வித்தியாசங்களுக்கும் இடமளிக்கும் அரசியல் சாசனம் நம்முடையது” என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in