

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 25-ம் தேதி தேசிய அளவிலான ‘பசு அறிவியல்’ தேர்வு நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசின் பால் மற்றும்கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில் ’ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக்(தேசிய பசு ஆணையம்) செயல்படுகிறது. அறிவியல் ரீதியாக பசுக்களை பாதுகாப்பதற்காக இந்த ஆணையம் கடந்த 2019-ல் அமைக்கப்பட்டது. இதன் சார்பில் விருப்ப அடிப்படையிலான தேர்வு (கொள் குறி வகை) வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. இணையதளம் மூலம் நடைபெறும் இத்தேர்வில் நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி முதல் கல்லூரி வரையிலானமாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
முதன்முறையாக நடைபெறும் இத்தேர்வு இனி ஆண்டுதோறும் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வது கட்டாயம் இல்லை என்பதால், பசுக்கள் மீது ஆர்வம் கொண்ட பொதுமக்களுக்கும் இந்த தேர்வை எழுத அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு மற்றும் சிறப்பு சான்றிதழ் வழங்கப்படும்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கத்தரியா கூறும்போது, ‘‘நாட்டு பசுக்களின் மீதான முக்கியத்துவம் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தேர்வு தொடங்கப்படுகிறது. தேர்வுக்கான பாடத்திட்டங்களை எங்கள் இணையதளத்தில் வெளியிட உள்ளோம். இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது" என்றார்.
மத்திய அரசின் கால்நடை மற்றும் பால் வளர்ச்சித் துறை சார்பில் கல்வி நிலையங்களில் பசுக்கள் மீதான ஆய்வுகளும், இருக்கைகளும் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. இதன் சார்பிலும் பல்வேறு ஆய்வுகள் மத்திய அரசின் நிதி உதவியால் நடைபெற்று வருகின்றன.