

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் கடந்த நவம்பர் 14-ல் முதல்வராக பதவி ஏற்றார். துணை முதல்வர்களாக இருவரை பாஜக அமர்த்தியது. அமைச்சர்களாக 14 பேர் பதவி ஏற்றனர். 243 எம்எல்ஏ-க்கள் கொண்ட பிஹாரில் 15 சதவீதம் பேரை (36) அமைச்சர்களாக அமர்த்தலாம். இதனால், அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டியது அவசியமாகி உள்ளது.
இந்நிலையில், அதிக எண்ணிக்கையில் 74 தொகுதிகளில் வெற்றிபெற்ற பாஜக, தங்கள் கட்சியினருக்கு அதிக அமைச்சர் பதவிகளை அளிக்க விரும்புகிறது. ஆனால் வெறும் 43 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜேடியு, அமைச்சரவையில் சரிபாதி இடம் வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனால் அமைச்சரவை விரிவாக்கத்தில் பாஜகவுக்கு சிக்கல் உருவாகி உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிஹாரின் பாஜக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘கடந்த ஆட்சிகளில் தங்கள் எம்எல்ஏ-க்களின் அதிக எண்ணிக்கையை காரணம் காட்டி நிதிஷ் அதிக அமைச்சர்களை அமர்த்தினார். இதை இப்போது அவர் ஏற்கத் தயாராக இல்லை. அமைச்சரவை விரிவாக்கத்திலும் பிரச்சினையானால் என்டிஏவிலிருந்து நிதிஷ் வெளியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனவே, இப்பிரச்சினையை எப்படி சமாளிப்பது என எங்கள் கட்சித் தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை செய்து வருகின்றனர்‘‘ என்றனர்.
பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியது முதலே நிதிஷ் குமார் பாஜகவால் குறி வைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இதே கூட்டணியிலிருந்து வெளியேறிய சிராக்பாஸ்வான், தனது கட்சி வேட்பாளர்களை ஜேடியு போட்டியிடும் இடங்களில் நிறுத்தினார். இதனால், பாஜகவைவிடக் குறைந்த தொகுதிகளில் ஜேடியுவுக்கு வெற்றி கிடைத்தமைக்கும் பாஜகவே காரணம் எனப் புகார் எழுந்தது. பிறகு, சுசில்குமாரை மீண்டும் துணை முதல்வராக்காமல் அப்பதவியில் புதிதாக இருவரை அமர்த்தியதிலும் நிதிஷ் அதிருப்தியாக உள்ளார். இதையடுத்து, அருணாச்சலப் பிரதேசத்தில் அவரது கட்சியின் 7 எம்எல்ஏ-க்களை பாஜகவில் இழுத்ததும் பிரச்சினையாகி விட்டது.
இந்நிலையில், வெறும் 15 தொகுதிகள் வித்தியாசத்தில் ஆட்சிஅமைக்கும் வாய்ப்பை இழந்த மெகா கூட்டணியிலிருந்து நிதிஷுக்கு மீண்டும் அழைப்பு வந்தபடி உள்ளது. இதன் காரணமாக அடுத்த சில வாரங்களில் பிஹாரில் ஆட்சி மாற்றம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற சூழல் நிலவுகிறது.