Published : 06 Jan 2021 06:52 PM
Last Updated : 06 Jan 2021 06:52 PM

மந்திரத் தகடுகள் போன்ற மதரீதியான பொருட்களின் விளம்பரங்களை சேனல்கள் ஒளிபரப்பவும், நடிகர்கள் நடிக்கவும் தடை: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை உயர் நீதிமன்றம்: கோப்புப் படம்.

மும்பை

மந்திரத் தகடுகள், குபேரத் தகடுகள் மூலம் அதீதமான சக்தி கிடைக்கும் என்று மதரீதியான பொருட்களை சேனல்கள் விளம்பரம் செய்யவும், நடிகர்கள் விளம்பரம் செய்யவும் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வாறு மதரீதியான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், விளம்பரங்களை ஒளிபரப்பும் சேனல்கள், நடிகர்கள் ஆகியோர் மீது ஏமாற்றுதல் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மாய தந்திரத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பை நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வில் நீதிபதிகள் தனாஜ் நலவாடே, முகுந்த் சேவ்லிகர் ஆகியோர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், “நடிகர்கள் ரோனித் ராய், அனுப் ஜலோடா, முகேஷ் கண்ணா, மனோஜ் குமார், பாடகர் அனுராதா பட்வால் உள்ளிட்ட சில தொலைக்காட்சி நடிகர்கள், இயந்திரத் தகடுகள், மந்திரத் தகடுகள் விளம்பரத்தில் நடிக்கிறார்கள்.
இந்தத் தகடுகளை வீட்டில் வைத்தால் அதீத சக்தி கிடைக்கும், இந்தத் தகடுகளை வாங்கினால் விரைவில் செல்வந்தராகலாம் என மக்களிடம் விளம்பரங்களில் நடிகர்கள் பேசி பொய்யான நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள்.

மக்களை ஏமாற்றும் விதத்தில் வெளியிடப்படும் இந்த விளம்பரங்கள் சட்டவிரோதமானவை. இந்த விளம்பரங்களை ஒளிபரப்பவும், அதில் நடிக்கும் நடிகர்கள் விளம்பரம் செய்யவும், மூடநம்பிக்கைகள், மாய தந்திரத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும்'' எனக் கோரப்பட்டது.

இந்த மனுக்களை மும்பை நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வில் நீதிபதிகள் தனாஜ் நலவாடே, முகுந்த் சேவ்லிகர் ஆகியோர் அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தனர்.

அதில், “அறிவியல்ரீதியான மனநிலையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமையாகும், . நன்கு படித்தவர்கள்கூட சில நேரங்களில் இந்த மாய தந்திரங்களால் ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். பணத்தைப் பறிக்கும் பொருட்களான ஹனுமன் எந்திரம், குபேர எந்திரம், தகடுகள் இவை அனைத்துக்கும் அதிகமான சக்தி இருப்பதாக விளம்பரங்களில் கூறப்படுகின்றன. இந்தப் பொருட்களுக்கு அவ்வாறு எந்தவிதமான சக்தி இருப்பதை விற்பனையாளராக நிரூபிக்க முடியாது என்று நீதிமன்றம் சொல்வதில் தயக்கம் ஏதும் இல்லை.

இதுபோன்ற மதரீதியான பொருட்களை விற்பனை செய்யும் விளம்பரங்கள் மாநிலத்தில் எந்த சேனல்களிலும் ஒளிபரப்பக் கூடாது. இதைக் கண்காணிக்க மும்பையில் மத்திய அரசு, மாநில அரசு இணைந்த ஓர் காண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு ஒளிபரப்பாகும் விளம்பரங்களை நிறுத்தவேண்டும். நடிகர்கள் அதுபோன்ற விளம்பரங்களில் நடித்தாலோ, சேனல்கள் விளம்பரங்களை ஒளிபரப்பினாலோ, விற்பனை செய்து மக்களை ஏமாற்றினாலோ மூட நம்பிக்கை மற்றும் மாய தந்திரத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x