

இங்கிலாந்து பிரதமர் குடியரசு தின வருகை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், குடியரசு தினக் கொண்டாட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என்று சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டங்களில் முக்கிய விருந்தினராகக் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அந்நாட்டில் உருமாறிய கரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடியினால் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மேலும், உள்நாட்டில் நெருக்கடியான காலகட்டம் நிலவும் சூழலில் தனது இருப்பு மிகவும் அவசியமானது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கருதுவதாக அவருடைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருந்தார். உருமாறிய கரோனா வைரஸ் பரவலால், இங்கிலாந்தில் வரும் பிப்ரவரி மாதம் வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று போரிஸ் ஜான்சனுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டபோது, குடியரசு தினக் கொண்டாட்டங்களின் பிரதான விருந்தினராக இந்தியா தன்னை அழைத்ததற்கு ஜான்சன் நன்றி தெரிவித்தார். ஆனால், அவர் கலந்துகொள்ள முடியாமல் போனதற்காக வருத்தமும் தெரிவித்தார்.
இதனை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்தானது. இதுகுறித்து அவரது அலுவலகம் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
"இப்போது போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை கோவிட் இரண்டாம் அலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியரசு தினத்தன்று நமக்கு ஒரு முக்கிய விருந்தினர் இல்லை.
ஏன் ஒரு படி மேலே சென்று குடியரசு தின விழாக்களை முழுவதுமாக ரத்து செய்யக் கூடாது?. வழக்கம் போல் அணிவகுப்பை உற்சாகப்படுத்தக் கூட்டம் வருவது பொறுப்பற்றது"
இவ்வாறு சசி தரூர் தெரிவித்துள்ளார்.