

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
58 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 13 பேருக்கு இந்த வைரஸ் பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் தெற்கு இங்கிலாந்து பகுதியில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததையடுத்து, அந்நாட்டில் மீண்டும் லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பிரிட்டனுடனான விமானப் போக்குவரத்தையும் பல ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியுள்ளன. இந்தியாவும் பிரிட்டனுக்கு 6-ம் தேதி வரை விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.
ஆனால், 7-ம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானப் போக்குவரத்து வாரத்துக்கு 30 விமானங்கள் வீதம் இயக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் மரபணு ஆய்வுக்காக பல்வேறு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதில் செவ்வாய்கிழமை வரை (நேற்று) 58 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மேலும் கூடுதலாக 13 பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உருமாறிய கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுடன் பயணித்தவர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அனைவரும் விசாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரிட்டன் தவிர்த்து உருமாறிய கரோனா வைரஸ் பரவல் டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்க கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்குக் கரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால் அவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.