Last Updated : 06 Jan, 2021 01:27 PM

 

Published : 06 Jan 2021 01:27 PM
Last Updated : 06 Jan 2021 01:27 PM

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, இமாச்சலில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி: மத்திய அரசு அறிவிப்பு

படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், கேரளா, இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் அதாவது, ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இந்த மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் அனைத்தையும் தேசிய வேளாண் ஆய்வுக் கவுன்சில் மற்றும் விலங்குகளுக்கான நோய்களைக் கண்டறியும் தேசிய மையத்துக்கு அனுப்பிப் பரிசோதனை செய்ததில், பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாரன், ஜலாவர், கோட்டா ஆகிய மாவட்டங்களில் காகங்களுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பதும், மத்தியப்பிரதேசத்தில் மாண்டசூர், இந்தூர், மால்வா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் காங்கராப் பகுதியில் புகலிடம் தேடி இடம் விட்டு இடம் நகரும் பறவைகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கோட்டயம், ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள கோழிப் பண்ணைகளிலும், வாத்துப் பண்ணைகளிலும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களுக்குக் கடந்த 1-ம் தேதி அமைச்சகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க வேண்டிய வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இமாச்சலப் பிரதேச மாநிலத்துக்கு 5-ம் தேதி (நேற்று) அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டல்கள் அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. கேரள அரசு பறவைக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கி செய்து வருவதாகவும் தகவல்கள் உறுதி செய்கின்றன.

பறவைக் காய்ச்சல் தொடர்பாக விரைவில் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்படும். நாள்தோறும் மாநிலங்களில் உள்ள சூழலைக் கண்காணித்து, புள்ளிவிவரங்களைப் பெற்றுச் சேகரித்தலும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைள் குறித்தும் கேட்கப்படும்.

வனங்களில் வழக்கத்துக்கு மாறாக ஏதேனும் பறவைகள் இறந்திருந்தால், அதைத் தடுப்பது குறித்து வனத்துறைக்குத் தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் மாநில அரசுகள் வழங்க வேண்டும். அவ்வாறு இயல்புக்கு மாறாகப் பறவைகள் இறந்துள்ளதா என வனத்துறையினர் மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. கடந்த 2006-ம் ஆண்டில் இதுபோன்ற பறவைக் காய்ச்சல் தீவிரமானபோதும் மனிதர்களுக்குப் பரவியதாக ஆதாரங்கள் இல்லை. குளிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்துவரும் இந்தியாவுக்கு வரும் பறவைகள் மூலம்தான் இந்தக் காய்ச்சல் பரவுகிறது''.

இவ்வாறு மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x