

கரோனா வைரஸுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கை எடுத்ததற்காக இந்தியாவுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்றவல்லரசு நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன. இந்த நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தற்போது இடம்பெற்றிருக்கிறது. கரோனா வைரஸுக்கான இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்தியமருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியிருக்கிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் முதன்முறைாயக கரோனா தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
இந்நிலையில், வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியா மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளிட்ட உலக தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பில்கேட்ஸ் தலைமை வகிக்கும் ‘பில் அண்ட் மெலின்டா’ அறக்கட்டளையானது, பிரதமர் நரேந்திர மோடி அலுவலகத்துக்கு ‘டேக்’ செய்திருக்கும் ட்விட்டர் பதிவில், “அறிவியல் ஆராய்ச்சியிலும், தடுப்பு மருந்துகள் தயாரிப்பிலும் இந்தியா முன்னிலை வகிப்பது பாராட்டுக்குரியது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதேபோல, உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரஸ் அதனோம் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “கரோனா பெருந்தொற்றை ஒழிப்பதற்காக இந்தியா தொடர்ந்து தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாம் இணைந்து செயல்பட்டால் உலக மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான கரோனா தடுப்பு மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யலாம்” எனக் கூறியுள்ளார்.